ஒரு முறுக்கு 45 ரூபாய் : இது கேரள ஸ்டைல்..! தேனி வழியாக கேரளா சுற்றுலா செல்வோமா..?

ஒரு முறுக்கு 45 ரூபாய் : இது கேரள ஸ்டைல்..!  தேனி வழியாக கேரளா சுற்றுலா செல்வோமா..?
X

தேனி மாவட்ட மேகமலையின் அழகுக் காட்சி.

கேரளாவில் ஒரு முறுக்கு 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வாங்கி சுவைக்கின்றனர்.

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு செல்ல மூன்று வழித்தடங்கள் உள்ளன. இதில் தேனியில் இருந்து போடி வழியாக மூணாறு செல்லும் வழித்தடத்தையும், குமுளி வழியாக கோட்டயம் செல்லும் வழித்தடத்தையும் சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். கம்பம் மெட்டு வழித்தடத்தை தோட்ட வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மூணாறு கேரளா.

தேனி மாவட்டமே மிக அழகிய மாவட்டம். அதாவது தமிழகத்தின் இரண்டாவது அழகிய மாவட்டம் என வர்ணிக்கப்படுகிறது. காரணம் தேனி மாவட்டத்தின் இயற்கை வளங்களும், மேற்கு தொடர்ச்சி மலைகளும் இந்த வனப்பினை கொடுத்திருக்கின்றன. தேனி மாவட்ட எல்லையை தாண்டி கேரளாவிற்குள் புகுந்து விட்டால், ஒட்டுமொத்த உலக சூழலே மாறியது போன்ற ஒரு இயற்கை அழகு தென்படும். இந்த இயற்கை கொடுத்த பேரழகுதான் கேரளாவை கடவுள் தேசம் என கொண்டாட வைக்கிறது.

அதுவும் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள இந்த சூழலில் கேரளாவில் பயணிப்பது, மிகப்பெரிய சுவையான அழகு நிறைந்த ஒரு வித்தியாசமான அனுபவம். இதனால் தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிகளவு சுற்றுலா பயணிகள் கேரளாவிற்கு செல்கின்றனர். பஸ்சில் சென்றாலும், தனி வாகனங்களில் சென்றாலும் அழகினை ரசிக்கத் தவறுவதில்லை.

மூணாறு கேரளா.

தனி வாகனங்களில் செல்பவர்களுக்கு ஒரு வசதி, நினைத்த இடத்தில் தங்கள் வாகனத்தை நிறுத்தி, ரசிக்க வேண்டிய இடங்களை முழுமையாக ரசிக்க முடியும். பஸ்சில் சென்றால் பார்த்துக் கொண்டே கடந்து செல்ல வேண்டியது தான். எனவே கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் தனி வாகனத்தையே பயன்படுத்துவார்கள். இவர்கள் எங்கெங்கு நின்று இயற்கையை ரசிப்பார்கள் என்பது கேரளவாசிகளுக்கு நன்கு தெரியும்.

கேரளா செல்லும் வழியில் உள்ள டீகடை

அங்கெல்லாம் டீக்கடை போட்டு விடுவார்கள். கேரளாவில் பஜ்ஜி, சொஜ்ஜி எல்லாம் எவ்வளவு சூடாக இருந்தாலும் சுவைக்காது. இதனால் தமிழகத்தில் பஜ்ஜி, உளுந்த வடை ருசித்துப் பழகிய பயணிகள், கேரளாவில் இவற்றை பெரும்பாலும் சுவைப்பதில்லை.

ஆனால் கேரள ஸ்பெஷல் முறுக்கு, பருப்பு வடைகள் இங்கு மிகவும் பிரசித்தம். அதுவும் ஒரு முறுக்கு 45 ரூபாய். 150 கிராம் தான் எடை இருக்கும். அரிசி முறுக்கு, கார முறுக்கு என இரண்டு வகை உள்ளது. கேரளாவின் சில்லென்ற சாரல், இருண்ட பருவநிலை, பச்சைப்பசேல் என உடலிலும், உள்ளத்திலும் ஒட்டிக்கொள்ளும் பசுமை, ஒட்டுமொத்த உடலையும் சுண்டி இழுக்கும் குளிர்ச்சியை அனுபவிக்கும் போது, இந்த முறுக்கினை கடித்து பிளாக் டீ சாப்பிடும் சுகமே தனி தான்.


இந்த சுகத்தை கண்டறிந்து கேரளவாசிகள் பணம் சம்பாதித்து வருகின்றனர். கேரளாவில் ஒரு ஸ்பெஷல் எங்கு வேண்டுமானாலும், எந்த ஒரு சிறு டீக்கடையிலும், முறுக்கு போன்ற சிறிய அளவிலான ஸ்நாக்ஸ்களும், சூடான பிளாக் டீயும் கிடைக்கும். இப்போது இது தான் கேரளாவில் அதிகம் விற்பனையாவதாக இங்குள்ள டீக்கடை கேரளவாசிகள் கூறுகின்றனர். வாங்க... சந்தர்ப்பம் இருந்தால் ஒருமுறை நீங்களும்... போய் வாங்க... நம் இந்தியாவில் இவ்வளவு அருமையான பருவநிலை கொண்ட சுற்றுச்சூழலை கேரள பயணத்தில் அனுபவிக்கலாம்.

Tags

Next Story