கரூர் மாவட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அதிவேக இணைய தள வசதி
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கரூர் மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்கள், 157 கிராம ஊராட்சிகளுக்கு பாரத்நெட்- 11 திட்டத்தின்கீழ் அதிவேக இணையவசதி வழங்கப்படவுள்ளது. ஊராட்சிகளுக்கு கண்ணாடி இழை வடமானது (Optical Fibre Cable).தரைவழியாகவும், மின்கம்பங்களின் வழியாகவும் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கான உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் உள்ள கிராம சேவை மைய கட்டடம் அல்லது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நிறுவப்பட்டு வருகிறது. உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ள அரசு கட்டிடத்தில் உள்ள அறைகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டம் பொதுமக்களுக்கு வருங்காலத்தில் மிக முக்கியமான திட்டமாகும் . இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் பொழுது ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் அதிவேக இணைய வசதியை பயன்படுத்தி அரசு நலத்திட்ட சேவைகளை பொதுமக்கள் அனைவரும் அலைச்சலின்றி அவர்கள் வசிக்கும் ஊராட்சிகளிலேயே முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும்.
ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் இணைய வசதிக்கு நிறுவப்படும் OFC கேபிள் மற்றும் உபகரணங்கள் தமிழக அரசின் உடமையாகும். இவைகளை சேதப்படுத்துவதோ, களவாடப்படுவதோ மிக கடுமையான குற்றம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு தண்டனைக்குள்ளாக்க நேரிடும்.
காற்று, மழை போன்ற இயற்கை சீற்றத்தின் காரணாமாக கேபிள் கீழே விழுதல், பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக தெரியவந்தால் பொதுமக்கள் உடனுக்குடன் தொடர்புடைய ஊராட்சி அல்லது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உடனடியாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu