கூகுள் பே சவுண்ட்பாட் கருவி இந்தியாவில் அறிமுகம்: எதற்கு தெரியுமா?
கூகுள் பே சவுண்ட்பாட்
இந்தியாவில் சிறு வணிகர்களுக்கான கூகுள் பே சவுண்ட்பாட் (Google Pay SoundPod) அறிமுகமாக உள்ளது.
கடந்த வருடம் ஒரு சோதனை திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாதனம் விரைவில் பரவலாக பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
கடந்த ஆண்டு ஒரு குறிப்பிட்ட அளவிலான சோதனை திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் பே சவுண்ட்பாட் சாதனம், இந்தியாவில் விரிவாக அறிமுகமாக இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
"இந்த திட்டத்தில் (SoundPod) பங்கேற்கும் வணிகர்கள் நேர்மறையான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இது பணம் செலுத்தும் நேரத்தை குறைக்கிறது," என்று கூகுள் பேயின் துணைத் தலைவர் (Product) அம்பரீஷ் கெங்கே ஒரு வலைப்பதிவில் எழுதியுள்ளார்.
இந்தியாவில் 2017 செப்டம்பரில் தொடங்கப்பட்ட கூகுள் பே, பாதுகாப்பான டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தில் இந்தியாவின் முக்கிய பங்காளியாக உள்ளது.
கூகுள் பே சவுண்ட்பாட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை:
என்ன பயன்? வணிகர்கள், ஒரு பணப் பரிமாற்றம் நடக்கும்போது, அதை உடனுக்குடன் ஒலி வடிவில் அறிவிப்பதன் மூலம், QR குறியீடு பணப்பரிவர்த்தனைகளை கண்காணிக்க உதவும் ஒரு ஒலி சாதனம்தான் சவுண்ட்பாட்.
எப்படி செயல்படும்? வாடிக்கையாளர்கள் வணிகர்களின் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்த வேண்டும். பணப் பரிமாற்றம் சில வினாடிகளில் வெற்றிகரமாக முடிந்தவுடன், சவுண்ட்பாட் உடனடியாக குரல் அறிவிப்பை ஒலிக்கச் செய்யும்.
யாருக்கு பயன்படும்? இந்தியாவில், இந்த சாதனம் சிறு வணிகர்களுக்குக் கிடைக்கும், இது 'லட்சக்கணக்கான சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு' (SMBகள்) கணிசமான எளிமையையும் வசதியையும் கொண்டுவருகிறது.
இதன் போட்டியாளர்கள்: Paytm மற்றும் PhonePe போன்ற UPI நிறுவனங்கள் வழங்கும் பாக்ஸ்களே இந்தியாவில் இதன் போட்டியாளர்களாக இருக்கும்.
விலை? டெக் க்ரஞ்ச் படி, இந்தியாவில் இரண்டு கோடிக்கும் அதிகமான வணிகர்கள் இந்த வகை ஒலி அறிவிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற ஒரு பாக்ஸை உருவாக்க ஆகும் செலவு தோராயமாக $18 முதல் $20 வரை (சுமார் ₹1494 முதல் ₹1660 வரை) இருக்கும்.
கூகுள் பே சவுண்ட்பாட்: கூடுதல் தகவல்கள்
இந்த சவுண்ட்பாட் பல்வேறு இந்திய மொழிகளை ஆதரிக்கிறது. ஆரம்பத்தில், ஆங்கிலம் மற்றும் இந்தியுடன் தொடங்கி, பிற மொழிகள் படிப்படியாகச் சேர்க்கப்படும்.
பார்வைத்திறன் குறைபாடுள்ள வணிகர்களுக்கு இது குறிப்பாக உதவியாக இருக்கும்.
கூகுள் பே சவுண்ட்பாடுடன், வாடிக்கையாளர்கள் பணம் செலுத்திய விவரங்களை (தொகை போன்றவை) உரக்கக் கேட்கலாம், இது பரிவர்த்தனைகளில் மேலும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது.
சவுண்ட்பாட்கள் வணிகர்கள் தங்கள் போன்களில் நோட்டிபிகேஷன்களை திறந்து பார்க்க தேவை இல்லாமல், பணம் வந்து சேர்ந்த விபரத்தை உடனுக்குடன் அறிய உதவும்.
இதுபோன்ற ஒலி அறிவிப்புகள் போலியான பணப்பரிமாற்றங்களை கண்டறிந்து தடுக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறு வணிகர்களுக்கான முக்கியத்துவம்
இந்தியா முழுவதிலும் பரவலாக உள்ள சிறு கடைகள், மளிகைக்கடைகள், காய்கறி கடைகள் போன்றவற்றில் இந்த சாதனம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல சிறு வணிகர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களை வியாபார நேரத்தில் எப்போதும் கையில் வைக்க முடியாத நிலை இருக்கும். கூகுள் பே சவுண்ட்பாட் அவர்களுக்கு உடனடி அறிவிப்புகள் மூலம் பணப்பரிமாற்றங்களை எளிதாக உறுதி செய்ய உதவும்.
கூகுள் பே இந்தப் புதிய முயற்சியின் மூலம் பாரம்பரிய வணிக முறைகளையும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து வருகிறது. சிறு வணிகர்களுக்குக் கிடைக்கும் தொழில்நுட்ப கருவிகளை விரிவுபடுத்துவதன் மூலம் அவர்களின் வியாபாரத்தில் டிஜிட்டல் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் செயலாகவும் இது அமையும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu