கால் ரெக்கார்டிங் செயலிகளுக்குத் தடை விதித்த கூகுள் ப்ளேஸ்டோர்
இன்றைய காலகட்டத்தில், உலகத்தின் விலை மதிப்பற்ற விஷயம் என்பது ஒரு தனிநபர் பற்றிய தகவல் தான். அத்தகைய தகவல்களைத் திருடும் செயலிகளை தீங்கிழைக்கும் செயலிகள் எனக் கூறுவார்கள்.
கால் ரெக்கார்ட் ஆவது சம்பந்தப்பட்ட இரு நபர்களுக்குமே தெரியவேண்டும். அப்படித் தெரிந்திருந்தால் மட்டுமே அந்த ரெக்கார்டிங் தனியுரிமை பாதுகாப்பு கொண்டது.
பொதுவாக, ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான செயலிகள் ஜிபிஎஸ், கேமரா போன்ற பல்வேறு அம்சங்களுக்கு அனுமதி கேட்கும். அத்தகைய செயலிகளில் சிலவற்றுக்கு அந்த அம்சங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவையே இருக்காது. ஆனாலும் அந்த செயலிகளைப் பயன்படுத்துவதற்காக அதற்கான அனுமதிகளை நாம் வழங்குவோம்.
இதுபோன்று தேவைப்படாத தகவல்களைக் கேட்கும் செயலிகள், அப்படித் திரட்டும் பயனர் பற்றிய தரவுகளை வேறு வழிகளில் பயன்படுத்துகின்றன. இது ஸ்மார்ட்ஃபோன் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் தொடர்ந்து சிக்கலாக இருந்து வருகிறது.
இந்த விஷயத்தில் ஆப்பிள் நிறுவனம் மிகுந்த கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. ஆனால், ஆன்ட்ராய்டில் அவ்வளவு கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை. சமீப காலங்களில், கூகுள் ப்ளேஸ்டோர் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது..
ஆண்ட்ராய்ட் பயனர்கள் பயன்படுத்தும் பல்வேறு செயலிகளில் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் கூகுள் அல்லது ஆண்ட்ராய்ட் உடன் தொடர்பில்லாத வெளிநபர் சார்ந்த செயலிகளும் அடக்கம். அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் செயலிகள் பயன்படுத்தக்கூடிய அப்ளிகேஷன் ப்ரோட்டோகால் இன்டர்ஃபேஸை (API) இனி அனுமதிக்கப்போவதில்லை என்று கூகுள் மே 5-ஆம் தேதியன்று அறிவித்தது.
கூகுள், ஆப்பிள் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே தொடர்ந்து இதுபோன்ற செயலிகளைக் கண்டறிந்து தடை செய்கின்றன என்றாலும், ஆப்பிள் நிறுவனம் இதை வெற்றிகரமாகச் செய்கிறார்கள்.
ஆனால், ஆண்ட்ராய்டில் எந்தவொரு செயலி வடிவமைப்பாளரும் ஒரு செயலியை உருவாக்கி அதை பதிவேற்றிவிட முடியும். தற்போது கூகுளும் ஆப்பிள் நிறுவனத்தைப் போல தீங்கிழைக்கக்கூடிய செயலிகளை நீக்க கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
சமீபத்தில் கால் ரெக்கார்டிங் சேவைகளை வழங்கக்கூடிய செயலிகளை அனுமதிக்கக்கூடாது என முடிவெடுத்துள்ளனர். ஏற்கெனவே ஆப்பிள் ஃபோன்களில் கால் ரெக்கார்டிங் வசதி கிடையாது. ஆனால், ஆண்ட்ராய்ட் தளங்களில் இத்தகைய செயலிகள் நிறையவே உள்ளன.
அதைத்தான் தற்போது கூகுள் தடை செய்துள்ளது. ஒவ்வொரு வகையான செயலிகளுக்கும் அதற்கான ஏபிஐ இருக்கும். ஒரு செயலியை உருவாக்குபவர் அந்த செயலி எந்த சேவைக்காக உருவாக்கப்படுகிறதோ அந்த சேவைக்கான ஏபிஐ இருந்தால் மட்டுமே அதை உருவாக்க முடியும். உதாரணமாக, கால் ரெக்கார்டிங் செயலியை வடிவமைக்க, கால் ரெக்கார்டிங் சேவைக்கு உள்ள ஏபிஐ இருந்தால் மட்டுமே அதற்கான செயலியை உருவாக்க முடியும்.
இதில் தற்போது கால் ரெக்கார்டிங் செயலிகளுக்கான ஏபிஐ-ஐ இனி ப்ளேஸ்டோரில் அனுமதிக்கப் போவதில்லை என கூகுள் முடிவெடுத்துள்ளது. ஆனால், ஆண்ட்ராய்ட் நிறுவனங்களே அவர்களுடைய ஸ்மார்ட்ஃபோன்களில் வழங்கக்கூடிய கால் ரெக்கார்டிங் வசதிகள் தொடர்ந்து இயங்கும்.
ஏற்கெனவே பயன்படுத்திக் கொண்டிருக்கும் கால் ரெக்கார்டிங் செயலிகள் என்னவாகும்?
நீங்களாக அதை நீக்கும் வரை அது இயங்கும். இருப்பினும், அப்படி பயன்படுத்திக் கொண்டிருக்கும் செயலிகளை நீக்கிவிட்டு, பிறகு மீண்டும் ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பதிவிறக்கம் செய்யமுடியாது
இப்போது தனியுரிமை தொடர்பான இப்படியொரு நடவடிக்கையை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், எந்தளவுக்கு இது நடைமுறைக்கு சாத்தியம் என பார்க்க வேண்டியுள்ளது. ஆண்ட்ராய்டில் ஒரு தீங்கிழைக்கும் செயலியைக் கொண்டுவருவது அவ்வளவு கடினமான காரியமல்ல, எளிமையாகவே செய்துவிட முடியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu