ரயில் பாதைகளில் ஆடு, மாடுகள் குறுக்கிட்டால் அபராதம்; ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை
ரயில் பாதைகளில், கால்நடைகள் குறுக்கிட்டால் அபராதம்; ரயில்வே துறை எச்சரிக்கை
ரயில் தண்டவாள பாதைகளில் ஆடு, மாடுகளின் குறுக்கீடு தற்போது அதிகரித்து வருவதன் காரணமாக, ரயிலில் அடிபட்டு இறக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் ரயில் என்ஜின் சேதமடைந்து வருவதும் நிகழ்ந்து வருகிறது.
இதனிடையே ரயில் பாதைகளில் ஆடு, மாடுகள் குறுக்கிட்டு மோதினால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு, 6,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் ரயில்வே துறையை மேம்படுத்தும் வகையிலும், பயணிகளின் வசதியை மேம்படுத்துவதன் காரணமாக அதிவேக ரயில்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரை 5 வந்தே பாரத் ரயில்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். வந்தே பாரத் ரயில் துவக்கி வைக்கப்பட்ட சில நாட்களிலேயே கால்நடைகள் மீது மோதி முன்பக்கம் சேதமடைந்தது. தொடர்ந்து 3 முறை சேதமடைந்ததால் இந்த ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்படுகின்றன. மேலும் ரயில்களின் பாதைகளில் ஆடு, மாடுகள் போன்ற விலங்குகள், திடீரென குறுக்கே சென்று, விபத்து அதிகரித்து வருகின்றன. இதனால் சில நேரங்களில் ரயில்கள் தடம் புரளும் அபாயமும் இருந்து வருகிறது.
இதனை தடுக்கும் வகையில், ரயில் பாதைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் தடுப்புச் சுவர்கள் அல்லது தடுப்பு வேலிகள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உடனடியாக, வேலிகளை அமைப்பதில் சிக்கல் இருந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 11ம் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட சென்னை சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம் மைசூரு இடையேயான 'வந்தே பாரத்' ரயில் சேவை, பயணியரிடம் வரவேற்பை பெற்று வருகிறது. மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் சென்றாலும், முக்கிய வளைவு பகுதிகளில், மணிக்கு 75 முதல் 90 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த 17ம் தேதி, வந்தே பாரத் ரயில் அரக்கோணம் அருகே வந்தபோது திடீரென கன்றுக்குட்டி ரயில் பாதை குறுக்கே சென்றதால், ரயில் மோதி உயிரிழந்தது. இதனால் ரயிலின் முகப்பு பகுதியில் சிறு சேதம் ஏற்பட்டதால் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. வந்தே பாரத் ரயில்களில் அடிக்கடி மாடுகள் மோதும் சம்பவம், பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ரயில் பாதைகளை ஆடு, மாடுகள் கடந்து செல்வதை தடுப்பதற்காக அவற்றின் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறோம்.
ரயில்வே சட்டத்தின் படி, ரயில் பாதைகளில் ஆடு, மாடுகள் குறுக்கிட்டு மோதும் பட்சத்தில் உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனக் கூறினார். மேலும் ஆடு, மாடுகளின் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து வருகிறோம் எனவும் அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu