நெதர்லாந்து சூரியத்தமிழ் தொலைக்காட்சி நடத்தும் உலக சாதனைக் கவியரங்கம்
நெய்தல் நிலமாம் நெதர்லாந்து நாட்டில் இருந்து தமிழோசைப் பரப்பிவரும் சூரியத்தமிழ்த் தொலைக்காட்சி தான் தோன்றி பத்துமாதக் காலத்திலேயே பெருஞ்சாதனையை நிகழ்த்தி பேராண்மை கொண்டு விளங்குகின்றது.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்-தமிழும் கலையும் நம்மிரு கண்கள்" என்ற தாரக மந்திரத்தைத் தன் கொள்கை முழக்கமாகக் கொண்டு இயங்குகிற சூரியத் தொலைக்காட்சியை பரதநாட்டிய ஆசிரியரும் நர்த்தகியும் 'நாட்டியப்பேரொலி'உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவருமான திருமிகு சாந்தி ரவீந்திரன் அவர்கள் இயக்குனராகவும் அவரது இணையர் திருமிகு ரவீந்திரன் இணை இயக்குனராகவும் இருந்து சிறப்புற நடத்தி வருகின்றனர்.
நெதர்லாந்து நாட்டின் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு அந்நாட்டு அரசாங்கத்தின் அங்கீகாரத்தோடு செயற்படுகின்ற இந்த இணையவழித் தொலைக்காட்சி இன்று நெதர்லாந்தினைக் கடந்து உலகப்பரப்பு முழுதும் வாழும் தமிழரிடையே புகழ்பெற்று வருகின்றது.
இலைமறைக் காயாக இருந்த/இருக்கின்ற ஆயிரக்கணக்கான கலைஞர்கள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,படைப்பாளிகளை இத்தொலைக்காட்சி உலக அரங்கின்முன் கொண்டுவந்து நிறுத்தி அரும்பணியாற்றி உள்ளது.
அந்த வகையில் நெதர்லாந்து சூரியத் தமிழ் தொலைக்காட்சி உலக சாதனை கவியரங்கம் நடத்தும் விதமாக 'இன்பமே எந்நாளும் துன்பமில்லை' என்ற தலைப்பில் உலகம் முழுவதும் இருந்து பல நாடுகளை சேர்ந்த தமிழ்க் கவிஞர்கள் பங்கேற்கும் கவிதை அரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. பிப்.26ம் தேதி இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது.
கவிதை அரங்கிற்கு தலைமை ஏற்று கவிஞர் வீரா.பாலச்சந்திரன் நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியை சூரிய தமிழ் தொலைக்காட்சி நிறுவனர் சாந்தி இரவீந்திரன் ஏற்பாடு செய்துள்ளார். நெதர்லாந்து சூரியத்தமிழ்த் தொலைக்காட்சி நடத்தும் உலகசாதனைப் பெருநிகழ்வின் ஒரு அங்கமாக இந்த கவியரங்கம் நடத்தப்படுகிறது. அனைவரையும் ஆன்லைன் வாயிலாக கலந்துகொள்ள நிறுவனம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu