ஓபிஎஸ்-க்கு உலக சமாதான விருது: கோவைஆதினம் வழங்கல்

ஓபிஎஸ்-க்கு உலக சமாதான விருது: கோவைஆதினம் வழங்கல்
X

காமாட்சிபுரம் ஆதீனம் சார்பில் ஓபிஎஸ்க்கு உலக சமாதான விருது வழங்கபட்டது

கோவையில் உள்ள காமாட்சிபுரி ஆதீனம் முக்கிய விருதை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆதீனம் என்பது சைவ சித்தாந்தத்தை வளர்க்கவும், மக்களிடையே பரப்பும் வகையிலும் உருவாக்கப்பட்ட மடங்களே ஆகும். இதன் தலைவர்கள் ஆதீன கர்த்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் தருமபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்டவை புகழ்பெற்றவையாக விளங்குகின்றன. இவை அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. ஆதீன கர்த்தர்களுடன் நெருங்கி பழகிய கட்சி தலைவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களிடம் ஆசி பெறும் போது அரசியல் ரீதியாக பல காரியங்களை சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் நிலவி வருகிறது.

கோவை ஒண்டிப்புதூர் அருகே காமாட்சிபுரி 51 சக்தி பீட கோவில் உள்ளது. இதன் ஆதீனமாக காமாட்சிபுரி சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உள்ளார். இந்தக் கோவிலில் உலக சமாதான தெய்வீக பேரவை சார்பில் 20-ம் ஆண்டு உலக சமாதான பெருவிழா நடைபெற்றது.


இதில் கலந்து கொண்ட ஓபிஎஸ் அங்கு கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: நான் இந்த கோவிலுக்கு வருவதாக காமாட்சிபுரி ஆதீனத்திடம் பலமுறை கூறியிருந்தேன். ஆனால் இங்கு வருவதற்கான சமயம் கிடைக்காததால், என்னால் வர முடியவில்லை. இன்று நான் வந்துள்ளதை நான் பாக்கியமாக நினைக்கிறேன்.

உலக சமாதானத்திற்காக தெய்வீக பணியை செய்து வரும் ஒரே ஆதீனம் காமாட்சிபுரி ஆதீனம். சமத்துவம், சமாதானம், ஜாதி, மதம் கடந்து மக்கள் நலனுக்காக அவர் வாழ்ந்து வருகிறார். உலக சக்திகளை ஒரே இடத்தில் உருவாக்கி உலக மக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆரோக்கியத்தை வழங்கி வருகிறார். இதனை நான் பாராட்டுகிறேன்.

இந்த நிகழ்ச்சியில் வந்து உங்களை சந்திப்பதை எனது பாக்கியமாக கருதுகிறேன். ஜெயலலிதா அவர்களுக்கு இந்த ஆதீனத்தின் மீது பற்றும், பாசமும் உண்டு. இதேபோன்று பிரதமரும், காமாட்சிபுரி ஆதீனம் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். விவசாயிகளுக்காக போராடி வரும் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். விவசாயிகளி துன்பங்களை நீக்க செல்லமுத்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். செல்லமுத்து மீது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் மிகுந்த அன்பு வைத்திருந்தனர். இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு உலக சமாதான விருது வழங்கப்பட்டது. பின்னர் கோவில் சீடர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

உட்கட்சி பூசலில் தவித்து வரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு காமாட்சிபுரி ஆதினத்தின் ஆசிர்வாதம் திருப்புமுனையாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி