பெண்கள் யாசகம் கேட்கவில்லை, உரிமைகளுக்காக போராடுகிறோம்: கனிமொழி எம்.பி.

பெண்கள் யாசகம் கேட்கவில்லை, உரிமைகளுக்காக போராடுகிறோம்: கனிமொழி எம்.பி.
X

திமுக எம்பி கனிமொழி (பைல் படம்)

பெண்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம் என்றும் சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் கனிமொழி எம்.பி. பேசினார்

திமுக மகளிர் அணியின் சார்பில், சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், மகளிர் உரிமை மாநாடு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார்.

இந்த மகளிர் உரிமை மாநாட்டில் திமுக துணைப்‌ பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி பேசியதாவது:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அனைவரையும் சமமாக உடன்பிறப்பே என்று அழைத்ததைபோல தற்போது நானும் அழைக்கிறேன். "ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினால் ஆயிரம் மெழுகுவர்த்தியை ஏற்றிட முடியும் அதுபோல அறிவொலி பெற்ற பெண்ணால் சமூகத்தை மாற்ற முடியும்" என்று கருணாநிதி கூறினார்.

பெரியாரின் மகளிர் மாநாட்டில் ஏற்கப்பட்ட கொள்கைகள் கருணாநிதியின் ஆட்சியில் திட்டங்களாக மாறி சமூகத்தை ஏற்றம்பெற செய்தன. இந்தியாவிலேயே முதல்முறையாக காவல்துறையில் பெண்களை இணைத்து ஆண்களுக்கு பெண்களை காவல் அளிக்க வைத்தார் கருணாநிதி.

கருணாநிதியின் வழியில் ஆட்சி செய்யும் முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியின் முதல்நாளில் பெண்களுக்கான இலவச விடியல் பயணத்தை தொடங்கினார். படிக்கும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கினார். வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்தும் சும்மாதான் இருக்கிறார்கள் என்ற பெண்களின் உழைப்பை மதித்து உரிமைத் தொகையை வழங்கியவர்.

பெண்கள் சக்தியை நாங்கள் கொண்டாடுகிறோம் என்று மோடி பொய் கூறிவருகின்றார். என்றைக்கும் நடைமுறைக்கே வராத மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து மோடி அரசு பெருமை பேசுகிறது. மணிப்பூர் பெண்கள் கடுமையாக பாதிப்பட்டுள்ளனர். கலவரங்களில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே.

நாட்டின் முதல் குடிமகளான குடியரசு தலைவரையே கோயிலுக்கு அனுமதிக்கவில்லை, நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவிற்கு அழைக்கவில்லை. பாண்டிச்சேரியில் தலித் அமைச்சர் பதவி விலகும் நிலை உள்ளது. மோடி அரசில் குடியரசுத்தலைவர், அமைச்சர் விளையாட்டு வீராங்கனைகள் மற்றும் சாதாரண பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை.

பெண்களுக்கு கல்வி இல்லை, பாதுகாப்பு இல்லை, எதிர்காலம் இல்லை, பெண்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறார்கள். பெண்கள் யாசகம் கேட்கவில்லை, எங்கள் உரிமைகளுக்காக போராடுகிறோம் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

Tags

Next Story