பதிவுத்துறையின் அவலம்.. அல்லல் படும் மக்கள்.. ஏன் இந்த நிலை?
பைல் படம்
தமிழக பதிவுத்துறை கடந்த பல மாதங்களாகவே ‘ஆன்லைன் அப்டேட்’ எனக் காரணங்களைக் கூறி மக்களை பல்வேறு துன்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் ஆளாக்கி வருகிறது. மேலும் பத்திரப்பதிவிலும் தொய்வு நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் செய்வதறியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழக பதிவுத்துறை சென்னை, ராமநாதபுரம், கடலூர், கோவை, செங்கல்பட்டு, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, மதுரை மற்றும் வேலுர் ஆகிய 11 மண்டலங்களாக மாநிலம் முழுவதும் இயங்கி வருகிறது. இதன் கீழ் சார் பதிவாளர் அலுவலகங்கள் பல்வேறு விதமான பத்திரப்பதிவுகளை மேற்கொண்டு வருகின்றன.
பொதுமக்கள் தங்களது சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவகம் மற்றும் தாலுகா அலுவலகத்திற்கும் அலைய வேண்டி உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு டிஜிட்டல் முறையில் வழங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர் நடவடிக்கையாக பதிவுத்துறை மற்றும் வருவாய் துறை இரண்டையும் இணைக்கும் வகையில் ஆன்லைன் முறையை கொண்டு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமமின்றி பத்திரப்பதிவு செய்ய இயலும். அதன் ஒரு பகுதியாக நில விபரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் வேலைகள் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது.
அதேபோல், பதிவுத்துறையிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. மேலும் ஒருங்கிணைந்த இணையதளமும் உருவக்கப்பட்டுள்ளது. ‘விரிவான நில தகவல் இணையம்’ என்ற https://clip.tn.gov.in/ இணையதளம் உருவாக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆன்லைன் பணிகள் ஒருபுறம் மக்களை திருப்திபடுத்தினாலும், மறுபுறம் பல்வேறு துயரத்திற்கு ஆளாக்கி உள்ளதாகவே கூறலாம். இதுகுறித்து பல்வேறு அறிவிப்புகளையும் தமிழக அறிவித்து வரும் நிலையில், வழிகாட்டல் மதிப்பீட்டையும் பல மடங்கு உயர்த்தி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் ஆன்லைனில் பல்வேறு விதமான வழிமுறைகளை நீக்கி பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாக்கி வருகிறது. குறிப்பாக பத்திரப்பதிவுக்கு மக்கள் செல்லும் போது, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ததில் விடுபட்டுள்ள நில விபரங்கள், ஜுரோ மதிப்பீடு உள்ள நிலம் மற்றும் மனைகள் ஆகியவற்றிற்கு மெய்த்தன்மை சான்றிதழ் (அ) உண்மைத் தன்மை கேட்டு சார் பதிவாளர்கள் அலைகழிக்கின்றனர்.
அப்படி வாரக்கணக்கில் மெய்த் தன்மையை வாங்கிக்கொண்டு பத்திரப்பதிவிற்கு மீண்டும் சார் பதிவாளரிடம் வந்தால், புதிய உட் பிரிவை சேர்த்து பதிவு செய்யும் ‘‘காணப்படவில்லை’’ என்ற வழிமுறை ஆன்லைன் பணிகள் நடைபெறுவதால் தற்போது இல்லை என தெரிவிக்கின்றனர். இதனை நம்பி ஏராளமான மக்கள் டிடி எடுத்தும் மற்றும் பத்திரங்களை எழுதியும் பல நாட்களாக காத்துக்கிடக்கின்றனர்.
இதுகுறித்து சார்பதிவாளர்களிடம் தினமும் மக்கள் அலைந்து வருகின்றனர். இன்னமும் இந்த வழிமுறை இணையத்தில் காண்பிக்கப்படவில்லை. வருமா வராதா என்ற பதிலும் மக்களை பல்வேறு சிக்கலுக்குள் தள்ளி வருகிறது.
மக்கள் தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், முக்கிய செலவீனங்களான கல்வி, கடன்களை அடைத்தல், வீடு கட்டுதல் உள்ளிட்டவைகளுக்கு தங்களது சொத்துக்களை வைத்து வங்கிக் கடன் வாங்கி பூர்த்தி செய்கின்றனர். குறிப்பாக கவுன்சிலிங் முடிந்து கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட கல்லூரிகளில் தங்களை பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர்கள் வங்கிகளில் கடன் வாங்கி தங்களது பிள்ளைகளின் கல்லூரிக் கனவை நனவாக்கி வருகின்றனர். ஆனால் இந்த ஆன்லைன் பிரச்சனையால் தங்களது சொத்துகளை வைத்து வங்கிக்கடன் பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும் சார் பதிவாளர் அலுவலகங்களில் நத்தம், சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தினமும் மக்கள் திரும்பிச் செல்கின்றனர். பத்திர எழுத்தர்களும் பெரும் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்களும் பத்திர எழுத்தர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் தமிழக அரசு தற்போது பத்திரப்பதிவு குறித்து வெளியிட்டு வரும் அறிவிப்புகளால் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆன்லைன், பத்திரப்பதிவில் இரண்டு முறை பயோமெட்ரிக், வழக்கு நிலுவையில் இருந்தாலும் பத்திரப்பதிவு உள்ளிட்ட அறிவிப்புகளும், மோசடி செய்ததாக பதிவுத்துறை டிஜஜி கைது என இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி மக்களை வாட்டி வதைத்து வருகிறது தமிழக பதிவுத்துறை.
பொதுமக்களின் சிரமங்களையும் அவலங்களையும் போக்க தமிழக அரசு விரைந்து இதுபோன்ற சிக்கல்களுக்கு உடனடி தீர்வுகாண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu