எண்ணூரில் எரிவாயு மின்நிலையம் அமையுமா? தயங்கும் அரசு!

எண்ணூரில் எரிவாயு மின்நிலையம் அமையுமா? தயங்கும் அரசு!
X

எண்ணூர் அனல் மின்நிலையம் - கோப்புப்படம் 

இயற்கை எரிவாயு பயன்படுத்தினால் உற்பத்தி செலவு 10 ரூபாயாக இருக்கும் என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு தயக்கம் காட்டி வருகிறது.

தமிழக மின் வாரியத்திற்கு, சென்னை பேசின் பிரிட்ஜில், 120 மெகா வாட்; திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டையில், 107.88; ராமநாதபுரம், வழுதுாரில், 187.20; நாகை, குத்தாலத்தில், 101 என, மொத்தம், 516.08 மெகா வாட் திறனில், நான்கு எரிவாயு மின் நிலையங்கள் உள்ளன.அதில், பேசின் பிரிட்ஜில் நாப்தா அல்லது இயற்கை எரிவாயுவில் மின் உற்பத்தி செய்யலாம். மற்றவற்றில் எரிபொருளாக, இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. இந்த எரிவாயு, நாகை, திருவாரூரில் உள்ள ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் இருந்து பெறப்படுகிறது.

இதனால் ஒரு யூனிட் மின் உற்பத்தி செலவு, 3 ரூபாய்க்கு கீழ் உள்ளது. சென்னையில் இயற்கை எரிவாயு கிடைக்காததால், பேசின் பிரிட்ஜ் மின் நிலையத்தில் நாப்தா பயன்படுத்தப்படுகிறது. அதன் விலை அதிகம் என்பதால், ஒரு யூனிட் உற்பத்தி செலவு, 12 ரூபாய்க்கு மேல் உள்ளது. இதனால் தேர்தல், இயற்கை பேரிடர் சமயங்களில் அவசியம் இருந்தால் மட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

சென்னை எண்ணூரில் சென்னை எண்ணூரில், மின் வாரியத்திற்கு அனல் மின் நிலையம் இருந்தது. இது, மூடப்பட்டதை அடுத்து, 288 மெகா வாட் திறனில் எரிவாயு மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு அலகிலும் தலா 18 மெகா வாட் முதல் 20 மெகா வாட் என, மொத்தம், 2,000 மெகா வாட் திறனில் எரிவாயு மின் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக, 2021ல் அறிவிக்கப்பட்டது.

இதற்கு எரிபொருளாக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயு பயன்படுத்தப்பட உள்ளதால், ஒரு யூனிட் மின் உற்பத்தி செலவு 10 ரூபாயாக இருக்கும். எனவே, இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, அரசு முடிவு எடுக்காமல் தயக்கம் காட்டி வருகிறது.

இதற்கு எரிபொருளான இயற்கை எரிவாயு, இந்தியன் ஆயில் நிறுவனம் எண்ணூரில் அமைத்துள்ள திரவ நிலை எரிவாயு முனையத்தில் இருந்து, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு பெறுவதற்கும் திட்டமிடப்பட்டது.

எண்ணூரில் எரிவாயு மின் நிலையம் அமைப்பது தொடர்பாக ஒப்பந்த நிறுவனம் வாயிலாக விரிவான திட்ட அறிக்கையை மின் வாரியம் தயாரித்தது. இதன்படி தலா 18 மெகா வாட் உற்பத்தி செய்யும் வகையில், 16 அலகுகள் உடைய மின் நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த பரிந்துரையை தமிழக அரசிடம் முன்வைத்து, கடந்த ஆண்டு இறுதியில் மின்வாரியம் அனுமதி கேட்டது. இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

எண்ணூர் எரிவாயு மின் நிலையம் அமைக்க, 2,900 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயு, எரிபொருளாக பயன்படுத்தினால், ஒரு யூனிட் மின் உற்பத்தி செலவு 10 ரூபாய் வரை இருக்கும். அதேசமயம், அனல் மின் உற்பத்தி, ஒரு யூனிட் 5 ரூபாய்க்கு கீழ் கிடைக்கிறது.

எனவே, அதிக முதலீடு செய்வதுடன், மின் உற்பத்தி செலவும் அதிகம் ஏற்படும். இதனால், எண்ணூர் மின் திட்ட விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் முன், பல கட்ட ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

தற்போது, ஆலைகளுக்கு எண்ணூர் எரிவாயு முனையத்தில் இருந்து குழாய் வழித்தடத்தில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது. அங்கிருந்து, பேசின்பிரிட்ஜ் மின் நிலையத்திற்கு இயற்கை எரிவாயு எடுத்து வந்து, 30 மெகா வாட் திறன் உடைய இரு அலகுகளில் பயன்படுத்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக குழாய் வழித்தடம் அமைப்பது, அதற்கான செலவு உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளன.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!