உச்சநீதிமன்றத்தில் நாளை எடப்பாடிக்கு கிரீனல் சிக்னல் கிடைக்குமா?
எடப்பாடி பழனிசாமி.
அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஆகவும், தமிழக முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்கே இன்னும் முடிவு கிடைக்கவில்லை. இந்த சூழலில் நான்கரை ஆண்டு காலம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கி வந்த அ.தி.மு.க. அரசு சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பின்னர் அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒற்றைக் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. தற்போது அ.தி.மு.க. இ.பி.எஸ். அணி, ஓ.பி.எஸ். அணி இரு பிரிவாக செயல்பட்டு வருகிறது.
பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் மற்றும் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி தன்னை இடைக்கால பொதுச் செயலாளர் என கூறி வருகிறார். இதற்காக அவர் கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி அதில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார். அது மட்டும் இன்றி ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கினார். இந்த பொதுக்குழு செல்லாது என ஓ. பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் முதலில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்து தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக இருந்தது. அதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என அதிரடியாக தீர்ப்பளித்தார்கள். இந்த தீர்ப்பினை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் நாளை இறுதி கட்ட விசாரணை நடைபெற உள்ளது.
ஆரம்பத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஓ. பன்னீர் செல்வத்திற்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லியில் தற்போது அரங்கேறி வரும் காட்சிகள் அவருக்கு சாதகமாக இல்லை. அந்த வகையில் அ.தி.மு.க.வில் நடக்கும் தலைமைக்கான குத்துச்சண்டையில் இறுதி சுற்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஜி 20 மாநாட்டை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதில் அ.தி.மு.க. சார்பில் பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளன் என ஓ.பன்னீர் செல்வம் தான் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. அதற்கு பதிலாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என முகவரி இட்ட கடிதம் வந்ததால் அவர் கூட்டத்தில் பங்கேற்று திரும்பி வந்துள்ளார். இது எடப்பாடி பழனிசாமிக்கு பா.ஜ.க.வின் ஆதரவு கரங்கள் நீண்டு இருப்பதாக அரசியல் நோக்கர்களால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தான் நாளை உச்சநீதிமன்றத்தில் இறுதி கட்ட விசாரணை நடைபெற உள்ளது. ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ. பன்னீர்செல்வம் தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயங்களை தங்களது வழக்கறிஞர்கள் மூலம் வாதங்களாக வைத்தனர். அதனைத் தொடர்ந்து எழுத்து மூலமான வாதங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நாளை அளிக்கப்பட இருக்கும் தீர்ப்பு அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவதாக அமைய உள்ளது. தற்போது உள்ள சூழலில் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்து அவருக்கு கிரீனல் சிக்னல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க.விலிருந்து சுத்தமாக ஓரம் கட்டப்படும் நிலையே ஏற்படும்.
உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளித்தாலும் இந்த பிரச்சினையானது இத்துடன் முடியப்போவதில்லை. அடுத்து இரட்டை இலை சின்னம் கட்சி, அங்கீகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தனது காய்களை நகர்த்த தொடங்கும். அதிலும் பா.ஜ.க.வின் கரங்கள் நிச்சயம் நீளும் என்பதில் ஐயமில்லை. ஆக 2024 நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் இந்த பிரச்சனை நீண்டு கொண்டே போகும் என்றே அரசியல் நோக்கர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu