கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளம்: சிக்கித் தவிக்கும் மலைகிராம மக்கள்

கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளம்: சிக்கித் தவிக்கும் மலைகிராம மக்கள்
X

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை கடக்கும் மக்கள்.

கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் மலை கிராம மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் உகாா்த்தே நகா், சீனிவாசபுரம், செண்பகனூா், பிரகாசபுரம் சாலை, அப்சா்வேட்டரி, லாஸ்காட் சாலை, வெள்ளிநீா் வீழ்ச்சி செல்லும் சாலை, ஆனந்தகிரி ஆகிய பகுதிகளிலுள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளது.

குண்டும், குழியுமாக உள்ள சாலைகளில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். நேற்று முன்தினம் இரவு விடியவிடிய பெய்த மழையால் வசந்தநகா், இருதயபுரம், அட்டக்கடி, ஏரிச்சாலை ஆகியப் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச்சாலைகளில் புலிச்சோலை, கொண்டை ஊசி வளைவு, வடகரைப் பாறை, வடகவுஞ்சி, பி.எல். செட், பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன. இதனால் மலைச்சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் தடுப்புச் சுவா்களும் சேதமடைந்துள்ளன. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மலைச் சாலைகளை பாா்வையிட்டு தடுப்புச்சுவா்கள் சேதமடைந்த பகுதிகளில் ஒளிரும் கம்புகளை வைத்து எச்சரிக்கை பதாகைகளை வைக்க வேண்டும்.

ஏனென்றால் இரவு நேரங்களில் அதிகமான பனி மூட்டம் காணப்படுவதால் மலைச் சாலைகளில் வரும் வாகனங்கள் எச்சரிக்கையுடன் செல்ல வழிவகுக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

இந்த நிலையில் கொடைக்கானலில் உள்ள கடைகோடி கிராமங்களான சின்னூர், சின்னூர் காலனி, பெரியூர், கடைப்பாரைக்குழி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்க, கல்லாறு என்ற ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.

கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் கனமழையால் கல்லாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கக் கூடிய கிராமங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதி தடைப்பட்ட நிலையில் உள்ளது.

கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் பள்ளிகளில் படிக்கும் தங்களது குழந்தைகளை அழைத்து வருவதற்காக கயிறுகளை கட்டி ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து வருகின்றனர். காட்டாற்று வெள்ளத்தால் மலை கிராம மக்கள் கடும் அவதிக்ள்ளாகியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!