சட்டமன்றத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்தது ஏன்? -வால்டர் தேவாரம் (பகுதி11)
தமிழக சட்டமன்றம் பைல் படம்.
தமிழக காவல்துறையில் ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. வால்டர் தேவாரம். தனது பதவி காலத்தில் நடந்த முக்கிய சம்பவங்கள் குறித்து குறிப்பாக நக்சலைட்டுகள் என்கவுன்டர், தமிழ் ஈழ விடுதலை போராளி குழுக்களுடன் நடந்த துப்பாக்கிச் சூடு, வீரப்பன் வேட்டை பற்றி கடந்த தொடர்களில் கூறியிருந்தார். இன்று தொடர் 11 -ல் தமிழக சட்டசபையில் நடந்த ஒரு நிகழ்வு பற்றி கூறுகிறார். அது என்ன என்பதை அறிய தொடர்ந்து படிப்போம்.
தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த எம். ஜி. ஆர். மறைவை தொடர்ந்து அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் அப்போது இருந்த முதல்வர் ஜானகி தலைமையிலும், இன்னொரு பிரிவினர் ஜெயலலிதா தலைமையிலும் இரு அணியாக செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில் சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது சபாநாயகராக பி. எச். பாண்டியன் இருந்தார். அன்று இருந்த சூழலில் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிச்சயம் பிரச்சனை ஏற்படும் என ஒரு கணிப்பை உளவுத்துறையினர் அளித்திருந்தனர். இந்த தகவலின் அடிப்படையில் சட்டமன்ற கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டு இருந்தது. அப்போது வால்டர் தேவாரம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்தார்.
சட்டசபை பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடும் போது அவர்கள் வெளியில் தான் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். சட்டசபைக்குள் செல்ல மாட்டார்கள். சபைக்குள் ஏதாவது கலவரம் அல்லது அடிதடி பிரச்சனை என்றால் சபை காவலர் எனப்படும் தனி பாதுகாப்பு படையினர் தான் நடவடிக்கை எடுப்பார்கள். தேவையில்லாமல் பிரச்னை செய்யும் சட்டமன்ற உறுப்பினர்களை அவர்கள் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றிய சம்பவங்களும் நடந்து இருக்கிறது. ஆனால், தேவாரம் அங்கு போலீஸ் கமிஷனராக இருந்தபோது சட்டசபைக்குள் அவர் செல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது ஏன் என்பது பற்றி வால்டர் தேவாரம் கூறுவதை பார்ப்போமா?
அன்று பிரச்னை என்னவென்றால் அ.தி.மு.க.வின் இரு பிரிவுகளுக்குள் மட்டும் தான். மற்ற கட்சிகள் அமைதியாக இருந்தார்கள். ஒரு கட்டத்தில் பாதுகாப்பு கருதி போலீஸ் அதிகாரி என்ற முறையில் நான் உள்ளே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு அப்போது தலைமைச் செயலாளராக இருந்த வெங்கட்ராமன் அனுமதி கொடுக்கவில்லை. மரியாதைக்குரிய சட்டமன்றத்திற்குள் துப்பாக்கியுடன் செல்வது அதன் புனிதத் தன்மையை கெடுத்து விடும். ஆதலால் உள்ளே செல்லக்கூடாது என்று கடுமையாக தடுத்தார்.
ஆனால், நிலைமை இப்படி அல்ல. போலீஸ் உள்ளே செல்லவில்லை என்றால் அங்கு பெரிய பிரச்னை ஏற்படும் என கணித்திருந்ததால் நான் மட்டும் எனது பிஸ்டலுடன் உள்ளே சென்றேன். என்னுடன் சில காவலர்கள் வந்தார்கள். மற்ற அதிகாரிகள் யாரும் வரவில்லை. இந்த நேரத்தில் நாங்கள் உள்ளே சென்றதும் பால்கனியிலிருந்து எங்கள் மீது நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. ஆதலால் நாங்கள் வேறு வழியில்லாமல் சட்டமன்றத்திற்குள் கலவரத்தில் ஈடுபட்டவர்களை துரத்தி அடித்தோம் . பிரச்னை செய்த அனைவரும் வெளியேற்றப்பட்ட பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்தது எனது. எனது பணிக்காலத்தில் மறக்க முடியாத ஒரு சம்பவம் இது. நாங்கள் யாருக்கும் ஆதரவாகவும் நடந்து கொள்ளவில்லை. சட்டசபையின் புனிதத்தை கெடுக்க வேண்டும் என்பதும் எங்கள் நோக்கம் அல்ல. பாதுகாப்பு ஏற்படுத்தி அமைதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே சென்றோம் என்றார் வால்டர் தேவாரம்.
நெல்லை மாவட்டம் சிவகிரியில் நடந்த ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி நாளை கூறுகிறார் தேவாரம் (இன்னும் வரும்).
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu