யார் இந்த காளி ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை?
உலகம் முழுவதும் சர்ச்சை கிளப்பிய காளி ஆவணப்படத்தின் இயக்குனர், கவிஞர் லீனா மணிமேகலை.
கனடா வாழ் இந்தியர் ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை. கவிஞர் . இவர் கடந்த பதினேழு ஆண்டுகாலமாக கலை வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவருடை வித்தியாசமான படைப்புகள் சர்ச்சைகளையும், பலரும் கோபத்துக்கும் ஆளாக்கியுள்ளது. கவிஞர், ஆவணப்பட இயக்குநர், சுயாதீன திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட லீனா மணிமேகலை, பாலியல் - சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஈழப்போராட்டங்கள் குறித்தும் திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார்.
இவருடைய 'மாடத்தி, 'செங்கடல்' போன்ற திரைப்படங்கள் சர்வதேச கவனம் பெற்றிருக்கின்றன. சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இவரது படங்கள் திரையிடப்பட்டுள்ளன. பல்வேறு சர்வதேச விருதுகளையும் லீனா மணிமேகலை பெற்றுள்ளார்.
இதற்காக கொலை மிரட்டல், வன்புணர்வு செய்யப்படுவாய்-ஆசிட் அடிக்கப்படுவாய் போன்ற அச்சுறுத்தல்கள், அரசியல் கைதுகள், சென்சார் தலையீடுகள், அவதூறுகள், போலீஸ் புகார்கள், அரசியல் கைதுகள், மீடூ இயக்கத்தில் இணைந்து பாலியல் அத்துமீறல்களைப் பற்றி பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்குகள், அதன் அடிப்படையில் பாஸ்போர்ட் முடக்கம் என பல்வேறு துயரங்களை சந்தித்துள்ளார், ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை.
இந்நிலையில் தான், லீனா மணிமேகலை புதிய ஆவண படம் காளியை இயக்கி, தயாரித்து, நடித்தும் உள்ளார். இந்த படத்தின் சர்ச்சைக்குரிய போஸ்டர் மூலம் மத உணர்வுகளை புண்படுத்தியதாக லீனா மணிமேகலை மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை டெல்லி வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் அளித்துள்ளார். மேலும் காளி பட போஸ்டர் மிகவும் ஆட்சேபனைக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆவணப்படத்தின் ஆட்சேபனைக்குரிய புகைப்படம் மற்றும் கிளிப்பிங்கை தடை செய்யுமாறு வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் கோரியுள்ளார். காளி தேவியின் வேடமிட்ட பெண் ஒருவர் சிகரெட் பிடிப்பது போன்ற அந்த போஸ்டர், இந்து சமூகத்தினரின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் புண்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, விஷ்வ இந்து பரிஷத் தலைவர்களுள் ஒருவரான பிராச்சி சாத்வி, தன் டுவிட்டர் பக்கத்தில், "இந்துக்களே விழித்திருங்கள், இந்து மதத்திற்கு எதிரான இயக்குநரை புறக்கணியுங்கள்" என பதிவிட்டுள்ளார். இயக்குநர் அஷோக் பண்டிட், ஹரியானா பா.ஜக.வின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் ஷர்மா உள்ளிட்டோரும் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கங்களில் இந்த போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சர்வதேசம் முழுவதும் எழுந்துள்ள சர்ச்சை குறித்து லீனா மணிமேகலை கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு பரபரப்பான விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர்தான் என்றால் தரலாம் என பதிவிட்டுள்ளார்
காளி ஆவணப்பட போஸ்டரை அறிமுகப்படுத்து பதிவிடும் போது லீனா மணிமேகலை, ஒரு மாலைப்பொழுது, டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் படம். படத்தைப்பார்த்தா "arrest leena manimekalai" hashtag போடாம "love you leena manimekalai" hashtag போடுவாங்க என நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
அத்துடன் நிற்காமல், அதற்கு முன்னதாக, இந்த திரையிடல் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. 2021 செப்டம்பரில் இருந்து எனது சொந்தப் படத்தின் திரையிடலில் கலந்துகொள்ள பயணம் செய்வது ஒரு சோதனையாக மாறியது. வினோதமான #metoo அவதூறு வழக்கின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட எனது பாஸ்போர்ட்டை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் உட்பட 4 அடுக்கு நீதிமன்ற வழக்குகளில் போராடி வெற்றி பெற வேண்டியிருந்தது எனவும் விவரித்துள்ளார், லீனா மணிமேகலை.
அதுமட்டுமின்றி, இந்தியாவில் நடைபெற்று வரும் பா.ஜ.க ஆட்சி குறித்து, புதிய சிறைகளை கட்டுகிறதா பாஜக? அல்லது முழு நாட்டையும் ஒரே பெரிய சிறைச்சாலையாக மாற்றும் திட்டமா? நாளாந்தம் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டு எழுவது அதிகார எல்லையற்ற திகில் என கோபத்தை வெளிப்படுத்தியவர் ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை.
மேலும் லீனா மணிமேகலை என்னும் அவரது முகநூல் பக்கத்தில் 6 மணி நேரத்துக்கு முன்பு "நான் பால் புதுமையராகவும், திரைப்படங்களை இயக்கும் பெண்ணாக இருப்பதாலும் எனக்குள் இறங்கும் காளி, பால் புதுமையர் கொடியையும் கேமராவையும் பிடித்திருக்கிறார் என்கிறார்.
மேலும் காளி, கனடாவில் வாழும் பழங்குடி மக்களோடும், ஆப்பிரிக்க, ஆசிய, யூத, பாரசீக இனங்களை சேர்ந்த மக்களோடும் கலந்து மனித நேயத்தைக் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கிறார். கனடாவில் கஞ்சா சட்டப்பூர்வமானது என்றாலும் விலை அதிகம். பூங்காவில் படுத்துறங்கும் கனடாவின் வீடற்ற ஏழை கருப்பின உழைக்கும் மக்களிடம் காளியை உபசரிக்க ஒரு சிகரெட் தான் இருக்கிறது. அதை அன்புடன் ஏற்றுக் கொள்கிறார் காளி" எனவும் குறிப்பிட்டு சர்ச்சையை பலமடங்கு அதிகரித்துள்ளார், ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu