புதிய ரேஷன் அட்டை வினியோகம் எப்போது? அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம்

அமைச்சர் பெரிய கருப்பன்.
மகளிர் உரிமைத் தொகையை காரணம் காட்டி புதிய ரேஷன் அட்டை விநியோகத்தை தமிழக அரசு சமீபத்தில் நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் எப்போது மீண்டும் புதிய ரேஷன் அட்டை விநியோகிக்கப்படும்? என்பது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடி மின்னணு ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. பொருளாதார அடிப்படையில் AAY, PHH, NPHH, NPHHS, NPHHN என 5 வகை குறியீடுகளுடன் ரேஷன் அட்டைகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் சாமானிய மக்களுக்கு பருப்பு, பாமாயில்,கோதுமை, சர்க்கரை ஆகியவை மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மட்டுமல்லாது அரசு திட்டங்களுக்கும் ரேஷன் அட்டை முக்கியமானதாக இருக்கிறது.
இப்படி இருக்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல், புதியதாக ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு அட்டை விநியோகிக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இவர்களை தவிர நகல் ரேஷன் அட்டைகோரி விண்ணப்பித்தோர், முகவரி மாறி புதிய ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்தவர்களுக்கும் வழங்கப்படவில்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக நகல் ரேஷன் அட்டைகோரி விண்ணப்பித்தோர், முகவரி மாறி புதிய ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் அட்டை விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், புதியதாக விண்ணப்பித்தவர்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.
இது குறித்து அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கமளித்துள்ளார். கூட்டுறவுத் துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பெரிய கருப்பன் புதிய ரேஷன் அட்டை விநியோகம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
அவர் பேசியதாவது:-
நடப்பாண்டில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி வரை 15,87,522 விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.13,364.75 கோடி வழங்கப்பட்டுள்ளது. 56,659 பயனாளிகளுக்கு சுய உதவிக்குழு கடனாக ரூ.3,581.45 கோடி, 13,137 பேருக்கு டாப்செட்கோ கடனாக ரூ.101.26 கோடி, 7,561 பேருக்கு டாம்கோ கடனாக ரூ.63.89 கோடி வழங்கப்பட்டுள்ளது. 4,033 பேருக்கு தாட்கோகடனாக ரூ.34.39 கோடி, 9,641 பேருக்கு மாற்றுத் திறனாளி கடனாக ரூ.46.13 கோடி, 73,599 பேருக்கு சிறு வணிகக் கடனாக ரூ.277.21 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கூட்டுறவுத்துறையின் வளர்ச்சி அதிகரிக்கும். அதேபோல புதிய ரேஷன் அட்டை விநியோகம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக பலர் புதிதாக குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்தார்கள். ஆகவே, குறிப்பிட்ட காலத்துக்கு குடும்ப அட்டை விநியோகத்தை நிறுத்திவைக்க முடிவெடுக்கப்பட்டது. எனவே, சில ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு அதன் அவசியம் கருதி குடும்ப அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu