துருவ நட்சத்திரம் படம் எப்போது வெளியீடு? நீதிமன்றம் புதிய உத்தரவு
துருவ நட்சத்திரம் படத்தின் போஸ்டர்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்திருக்கும் "துருவ நட்சத்திரம்" திரைப்படத்தில் விக்ரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் உலகம் முழுவதும் இன்று வெளியாவதாக இருந்தது.
இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கக்கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள விஜய் ராகவேந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அதில், சிம்புவை நாயகனாக வைத்து "சூப்பர் ஸ்டார்" என்ற படத்தை இயக்குவதற்காக கவுதம் வாசுதேவ் மேனன் தங்களது நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டதாகவும், அதற்கு முன்பணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் அளித்ததாக கூறியுள்ளார்.
ஒப்பந்தப்படி அந்த பட வேலைகள் நடைபெறாத நிலையில் வாங்கிய முன்பணத்தை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பித் தரவில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். எனவே தம்மிடம் பெற்ற தொகையை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என விஜய் ராகவேந்திரா கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்குள் பணத்தை திருப்பி அளிக்கும்பட்சத்தில், துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடலாம் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனு இன்று மீண்டும் நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்பதால் படத்தை வெளியிடவில்லை எனக் கூறினார். மேலும், நவம்பர் 27 அல்லது 29 ஆம் தேதிக்குள் பணத்தை திரும்ப செலுத்திவிட்டு படத்தை வெளியிட உள்ளதாகவும் அவர் கூறினார். இதனையடுத்து, இந்த விவகாரத்தில் ஏற்படும் முன்னேற்றத்தை கவுதம் மேனன் தெரிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை நீதிபதி நவம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu