தெரு நாய் பிரச்சினைக்கு தீர்வு என்ன? மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி
நாய் தொல்லை பிரச்சினை பற்றி மத்திய மாநில அரசுகள் உரிய பதிலளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா உள்பட அனைத்து மாநிலங்களிலும் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்களை சுட்டுக் கொல்லக் கூடாது என விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டு இருப்பதால் அதனை இப்பொழுது யாரும் சுட்டுக் கொல்வதில்லை. அதனுடைய இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அவ்வப்போது கருத்தடை செய்வதாக கூறி பிடித்த இடத்திலேயே விட்டு விடுகிறார்கள். இதன் காரணமாக தெரு நாய்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. பொதுமக்களை விரட்டி விரட்டி நாய்கள் கடிப்பது பெரிய சவாலாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த பொதுநல மனுவில் தமிழகத்தில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள். இளைஞர்கள். முதியவர்கள் தெரு நாய்களால் கடிக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் அதிகரித்து வருகிறது .இது குறித்து உலக சுகாதார மையமும் எச்சரிக்கை வழங்கி உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே தமிழகத்தில் பொது இடங்களில் சுற்றி திரியும் தெரு நாய்களை அகற்றுவதோடு நாய்களுக்கான கருத்தடை சிகிச்சையை முறையாக செய்யவும் ரேபிஸ் தடுப்பு ஊசிகள் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் போதுமான அளவில் இருப்பதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன் ,விக்டோரியா கௌரி அமர்வு ஐகோர்ட் வளாகங்களிலேயே நாய்கள் சுற்றி திரியும் நிலை உள்ளது. அதையே கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை. தமிழக முழுவதும் இதே நிலைதான் உள்ளது. இது ஒருபுறம் இருக்க விலங்குகள் பாதுகாவலர் என்ற போர்வையில் மற்றொரு தரப்பினர் விலங்குகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என கூறி வருகின்றனர் மேலும் கருத்தடை செய்யாமல் காதில் ஓட்டை போட்டுவிட்டு கருத்தடை செய்ததாக கணக்கு காட்டுகின்றனர். உள்ளாட்சி அமைப்பினரின் இந்த செயலை என்ன செய்வது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு தொடர்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் சுகாதாரத்துறை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு நலத்துறை செயலாளர்கள் மற்றும் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu