'வீரப்பன் இருதயம் இல்லாத ஒரு மனிதன்' -வால்டர் தேவாரம் (பகுதி 7)
'இன்ஸ்டா நியூஸ்' இணைய செய்தி தளத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை டி.ஜி.பி. வால்டர் தேவாரம் பற்றிய தொடர் வெளி வருகிறது. இதுவரை பப்ளிஷ் ஆகியுள்ள பகுதி 6 வரையிலான தொடரில் வால்டர் தேவாரத்தின் இளமை பருவம், கல்லூரி வாழ்க்கை, ராணுவ பணி, காவல் துறையில் சேர்ந்தது மற்றும் அவர் நடத்திய முதல் என்கவுண்டர், அதன்பின்னர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நில உரிமையாளர்கள் விவசாய தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து வைத்தது, இதனைத் தொடர்ந்து தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் நக்சலைட்டுகளை ஒழிப்பதற்காக நடத்திய என் கவுண்டர்கள் பற்றி விரிவாக பார்த்தோம்.
வீரப்பன் வேட்டை
இன்று பகுதி 7 -ல் சந்தன கட்டை கடத்தல் காரன் வீரப்பனை வேட்டையாடுவதற்காக அவர் எடுத்த நடவடிக்கைகள், சந்தித்த அனுபவங்கள், அவனுடைய பலத்தை எவ்வாறு குறைத்தார் என்பது பற்றி பார்க்கலாம்.
அன்றைய வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் நக்சலைட்டுகள் ஒழிக்கப்பட்ட பின்னர் சந்தன கடத்தல் மன்னன் என்று வர்ணிக்கப்பட்ட வீரப்பனின் அட்டூழியம் பற்றியும், அவனை கைது கைது செய்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ,உயர் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். வீரப்பனை பிடிக்கும் பணியையும் நக்சலைட்டுகளை ஒழித்த வால்டர் தேவாரத்திடமே ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவர் தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு பிரிவு போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தார்.
இனி வீரப்பன் பற்றி வால்டர் தேவாரம் கூறுவது என்ன என்பதை பார்ப்போமா?
இருதயம் இல்லாத மனிதன்
வீரப்பன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் தான் என்றாலும் அவனுடைய நடமாட்டம் முழுவதும் கர்நாடக மாநில வனப்பகுதியில் தான் மிக அதிகமாக இருந்தது. கர்நாடக போலீசாருக்கு அவன் சிம்ம சொப்பனமாக இருந்து வந்தான். சுமார் 6000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி அது. தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களை உள்ளடக்கியதாக இருந்தது. இந்த வனப்பகுதியில் பதுங்கி இருந்து கொண்டு சந்தன கட்டைகளை கடத்துவது, வன விலங்குகளை வேட்டையாடுவது தான் அவனுடைய முக்கிய தொழில். அந்த வகையில் அவன் ஒரு பாரஸ்ட் அபண்டர். ஆனால் அவன் இருதயமே இல்லாத ஒரு மனிதன். நக்சல் பாரிகளுக்கும் அவனுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. நக்சல் பாரிகள் அவர்களுக்கென்று ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு செயல்பட்டார்கள். ஆனால் வீரப்பனுக்கு அந்த மாதிரி கொள்கை எதுவும் கிடையாது. அவன் ஒரு கொலைகாரன், கொள்ளைக்காரன் அவ்வளவுதான். தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் வீரப்பனின் நடமாட்டம் அவ்வப்போது இருந்தது.
வன அதிகாரியை கொலை செய்தவன்
வீரப்பனை பிடிப்பதற்காக கர்நாடக போலீசார் மற்றும் வனத்துறையினர் பல ஆண்டுகளாக முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்கு தண்ணீர் காட்டியதோடு தன்னை பிடிக்க வரும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறையினரும் கொலை செய்திருக்கிறான். கர்நாடகத்தை சேர்ந்த மாவட்ட வன அதிகாரி சீனிவாசன் மற்றும் இரண்டு சப் இன்ஸ்பெக்டர்களை கண்ணிவெடி தாக்குதல் நடத்திக் கொன்றிருக்கிறான்.
கூட்டு நடவடிக்கை படை
இந்த சூழலில் தான் கர்நாடக போலீசார் வீரப்பனை பிடிப்பதற்கு தமிழகத்தின் உதவியை நாடினார்கள். அதன்படி கர்நாடக மற்றும் தமிழ்நாடு போலீசார் அத்துடன் பி. எஸ். எப். எனப்படும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கை படை அமைக்கப்பட்டது. அந்த படைக்கு நான் தலைமை தாங்கி இருந்தேன். நக்சலைட் ஒழிப்பு படையில் என்னுடன் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அசோக்குமார் டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று எனது படையில் இடம் பெற்றிருந்தார். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா ஒரு நாள் என்னை நேரில் சந்திக்க வரும்படி அழைத்தார். நான் முதல்வர் அவர்களை சந்தித்தேன். அப்போது வீரப்பனை எப்படியாவது பிடித்தே ஆக வேண்டும் என உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து வீரப்பன் வேட்டை தொடங்கியது.
வீரப்பனை பிடிக்க சென்றபோது நடந்த திகில் சம்பவங்கள், கன்னிவெடி தாக்குதலில் இருந்து உயிர் தப்பியது எப்படி என்பது பற்றி நாளை பார்க்கலாம் (இன்னும் வரும்).
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu