இங்கிலாந்து கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை மீட்க வைகோ வலியுறுத்தல்

இங்கிலாந்து கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை மீட்க வைகோ வலியுறுத்தல்
X

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. (கோப்பு படம்).

இங்கிலாந்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியை சேர்ந்த மீனவர்கள், 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்புவது வழக்கம். கடந்த மாதம் செப்டம்பர் 15 ஆம் தேதி தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சின்னத்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மைன் பாஸ்டினுக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளில் சின்னத்துறை, தூத்தூர் ரவிபுத்தன் துறையைச் சேர்ந்த 28 மீனவர்கள், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 2 இருவர் என 32 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கடந்த 27 ஆம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதாகக் கூறி இங்கிலாந்து கடற்படையினர் 32 மீனவர்களையும் சிறைபிடித்து, இந்தியப் பெருங்கடலில் இங்கிலாந்து நாட்டுக்குச் சொந்தமான டீகோ கார்சியா தீவுக்குக் கொண்டு சென்று, அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துகொண்டனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மீனவர்களின் உறவினர்கள் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டீகோ கார்சியா தீவில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது இரண்டு படகுகளையும் மீட்டு இந்தியா கொண்டு வருவதற்கு மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Next Story