இ-சேவையில் வாக்காளர் அட்டை இனி பெற முடியாது: தலைமை தேர்தல் அதிகாரி
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியுள்ளதாவது: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான காலகட்டத்தை ஓராண்டுக்கு தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது. முன்பெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடந்து வந்தது. இப்போது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அந்தவகையில், இப்போதைய ஆண்டில் 4 காலாண்டிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் ஆகியவை நடைபெற்று வருகிறது. அதனால், புதிய வாக்காளர்கள் அனைவருக்கும், தேர்தல் ஆணையம் நியமித்துள்ள நிறுவனம் சார்பில், வாக்காளர் அச்சிடப்பட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பப்படும். அவர்கள் தபாலில் வாக்காளர்கள் வீடுகளுக்கு அனுப்புவார்கள்.
வாக்குச்சாவடி அலுவலர்கள் வழியாக வினியோகிப்பதும் பல்வேறு புகார்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. முன்னதாக வாக்காளர் அடையாள அட்டைகள், அரசின் இ-சேவை மையங்கள் மற்றும் இணைய சேவை மையங்களில் பெறும் வசதி இருந்தது. இப்போது புதிய அட்டைகள் பாதுகாப்பு அம்சங்களுடன் வழங்கப்படும் நிலையில், இணைய மையங்களில் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல போலி அட்டைகளை தடுக்கும் வகையில், இந்த புதிய அட்டைகளின் உட்புறத்தில் ஹோலோகிராம், கோஸ்ட் இமேஜ் என்ற நவீன வசதி, க்யூஆர் கோடு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த அட்டைகளை இ-சேவை மையங்களால் அச்சிட்டு வழங்க இயலாது என்பதால், தேர்தல் ஆணையமே நேரடியாக வழங்க முடிவெடுத்துள்ளது.
வாக்காளர் அடையாள அட்டையைப் பெற தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். புதிய வாக்காளர்கள், முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை திருத்தம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அட்டை விநியோகிக்கப்படுகிறது.
புதிய அட்டை கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு தேவை அடிப்படையில் விநியோகிக்கப்படுகிறது. அட்டையை தொலைத்தவர்களும் விண்ணப்பிக்கலாம். புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu