விருதுநகர் மாவட்டத்தில் 1668 எக்டேர் பரப்பில் சொட்டு நீர் பாசனத்திட்டம் செயல்படுத்த இலக்கு

விருதுநகர் மாவட்டத்தில் 1668 எக்டேர் பரப்பில் சொட்டு நீர் பாசனத்திட்டம் செயல்படுத்த இலக்கு
X
துளி நீரில் அதிக வருமானம் பெற சொட்டு நீர் பாசனம் செய்ய விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு


விருதுநகர் மாவட்டத்தில் 1668 எக்டேர் பரப்பளவில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் (PMKSY) தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக , விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் மழைப் பொழிவு மிகக் குறைவாக உள்ளது. விவசாயத்திற்கு குறைந்த அளவே தண்ணீர் இருப்பதால், இருக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்து அதிக வருமானம் ஈட்டும் நோக்கில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் (PMKSY) தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சொட்டுநீர்ப்பாசனம் அமைப்பதன் மூலம் களை எடுப்பதற்கு ஆகும் செலவு, தண்ணீர் பாய்ச்சும் நேரம் ஆகியவற்றைக் குறைக்கலாம். மேலும் சொட்டுநீர்ப்பாசனத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் நல்ல திரட்சியாக காணப்படும். இதன் மூலம் பாரம்பரிய விவசாய முறையைக் காட்டிலும் அதிக விளைச்சலைப் பெறலாம்.

பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை 100 சதவீத மானியம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 12.5 ஏக்கர் வரை 75 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது. தற்போது 2021-22 - ஆம் நிதி ஆண்டில்; விருதுநகர் மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 1668 எக்டேர் பரப்பில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தாங்கள் பயிரிடும் தோட்டக்கலை பயிர்களை அடங்கலில் பதிவு செய்து பாஸ்போட் அளவு போட்டோ, ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், மண் மற்றும் நீர் பரிசோதனை ஆய்வு அறிக்கை அடங்கல், கணினி சிட்டா, நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருப்பின், அதற்கான வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட சான்று ஆகிய ஆவணங்களைக் கொண்டு http://tnhorticulture.tn.gov.in (MIMIS -நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு) என்ற இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து பயன்பெறலாம்.

Tags

Next Story
ai automation in agriculture