விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி
புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை ஆட்சியர் மேகநாதரெட்டி வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் பிரிவின் மூலம் 12-வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்டஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 20 புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளையும், வாக்காளர் சுருக்க திருத்த பணிகளில் சிறப்பாக செயலாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற ஓவியம், கட்டுரை, ஒருவரி முழக்கம், பதாகை தயார் செய்தல், பாட்டு, வினாடி வினா, நடனம் உள்ளிட்ட போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்டஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி வழங்கினார்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒரு அங்கம் தேர்தல் ஆணையம். இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்ட நாளான ஜனவரி 25ம் நாளினை தேசிய வாக்காளர் தினமாக 2011ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது 18 வயது நிரம்பியவர்கள் சுலபமாக தங்களை வாக்காளர் பட்டியல்களில் சேர்க்க இணையதளம் மற்றும் செயலி மூலமாகவும் பதிவு செய்யும் வசதிகள் உள்ளன. எனவே 18 வயது நிரம்பிய அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். மேலும் மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட பழங்குடியினர், நரிக்குறவர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் பெயர்களும் வாக்காளர் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சார் ஆட்சியர்(சிவகாசி) பிரிதிவிராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், தேர்தல் வட்டாட்சியர் மாரிச்செல்வி மற்றும்; அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu