காரியாபட்டி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் விவசாயி படுகாயம்
காரியாபட்டி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் சிகிச்சை பெற்று வரும் முதியவர் முத்துராமன்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஆகிய பகுதிகளில் தற்பொழுது நல்ல மழை பெய்துள்ளதால் விவசாயிகள் தங்களது நிலங்களில் நெல், கடலை, வெங்காயம், மக்காச்சோளம் உட்பட பல்வேறு பயிர்களை பயிரிட்டுள்ளனர். இந்த பகுதிகளில் காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களில் விவசாய பயிர்களை தொடர்ந்து நாசம் செய்து வருகின்றது. காட்டுப் பன்றிகளால் ஏனைய கிராமங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்து வருகின்றது.
இந்நிலையில் காரியாபட்டி தாலுகா, முடுக்கன்குளம் ஊராட்சி, சிறுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமன் (65) என்பவர் முடுக்கன்குளம் அருகே கீழ புதுப்பட்டி பகுதியில் உள்ள காட்டில் கடலை பயிரிட்டுள்ளார். கடலை பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வந்ததால் அதனை பாதுகாப்பதற்காக முத்துராமன் 10.12.2021 இன்று மாலை 5 மணியளவில் காட்டில் இருந்துள்ளார். அப்பொழுது காட்டுப்பன்றிகள் அங்கு வந்த நிலையில் முத்துராமன் அதனை விரட்ட முயன்றுள்ளார்.
இதில் காட்டுப்பன்றிகள் முத்துராமனை தாக்கி அவரின் காலை கடித்து குதறியுள்ளது. முத்துராமனின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் காட்டுப்பன்றியை விரட்டி, படுகாயமடைந்த முத்துராமனை மீட்டு சிகிச்சைக்காக காரியாபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து, அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu