அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கின

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கின
X
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள், மழையின் காரணமாக நீரில் மூழ்கி சேதமடைந்தன.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூமாப்பட்டி, கான்சாபுரம், ரகுமத் நகர், மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னைக்கு அடுத்த படியாக நெல் விவசாயமே பிரதானமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக அணைகள் மற்றும் கண்மாய்கள் நிரம்பின. இதனால், விவசாயிகள் அந்த நீரை நம்பி மகிழ்ச்சியுடன் தங்கள் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகி நீர்நிலைகளில் நீரானது வேகமாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில், தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்து சேதமடைந்துள்ளன.

அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் மழையால் அவை சேதமடைந்துள்ளது, விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story