பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் விடுதலை

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில்   குற்றம் சாட்டப்பட்ட இருவர் விடுதலை
X

போலீசாரால் அழைத்து வரப்பட்ட நிர்மலா தேவி (கோப்பு படம்).

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நிர்மலா தேவி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கடந்த 26ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. அவர் கோர்ட்டுக்கு வந்து கொண்டிருந்த போது மயக்கம் ஏற்பட்டதால் அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை என அவருடைய வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையேற்ற நீதிபதி பகவதி அம்மாள், தீர்ப்பை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படவிருப்பதால் நிர்மலா தேவி கட்டாயம் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த வழக்கின் பின்னணி பற்றி அறிய நான்கு ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டியது உள்ளது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத் துறையில் பேராசிரியையாக இருந்து வந்தவர் நிர்மலா தேவி. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் பாடம் எடுத்து வந்தார். இவருக்கு அந்த பல்கலைக்கழகத்தில் அதிக செல்வாக்கு இருந்ததாக கூறப்படுகிறது. தேவாங்கர் கல்லூரியில் ஏழ்மை நிலையில் இருந்த மாணவிகளை நிர்மலா தேவி தொடர்பு கொண்டு அவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி முக்கிய புள்ளிகளுக்கு விருந்தாக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது ஒரு மாணவியை சமாதானம் செய்ய நிர்மலா தேவி பேசிய ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தன.

இந்த ஆடியோ கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியையே இப்படி அவர்களை பாழும் கிணற்றில் தள்ளிவிட முயற்சிப்பதா என தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. நிர்மலா தேவியிடம் விசாரணைக்கு சென்ற போது அவர் தனது வீட்டுக்குள் பூட்டிக் கொண்டு போலீஸாருக்கு ஆட்டம் காட்டினார்.

பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெளியே வந்த நிர்மலா தேவியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விவகாரத்தில் பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. வழக்கில் சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த முருகனும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேர் மட்டுமே குற்றவாளிகள் என இறுதி செய்யப்பட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டு இந்த வழக்கில் 1,160 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீஸார் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மேற்கண்ட மூவருக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. கொரோனா ஊரடங்கால் வழக்கு விசாரணை தாமதமானது.

பேராசிரியை நிர்மலா தேவிக்கான வழக்கறிஞர்கள் அடிக்கடி விலகிச் சென்றதால் அரசே அவருக்கு வேண்டிய வழக்கறிஞரை நியமித்துள்ளது. கடந்த 4ஆம் தேதி இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 26ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நிர்மலா தேவிக்கு எந்த மாதிரியான தீர்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த வழக்கில் முருகன், கருப்பசாமி ஆகியோர் நேற்றைய தினம் ஆஜராகினர். ஆனால் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. இதனால் அவர் தலைமறைவாகிவிட்டாரா என்ற உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகின.

Tags

Next Story