திருவில்லிபுத்தூரில் பழமையான திருமால் சிற்பம் கண்டெடுப்பு
திருவில்லிபுத்தூரில் கண்டெடுக்கப்பட்ட பழமையான திருமால் சிற்பம்
திருவில்லிபுத்தூரில் பழமையான திருமால் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வடமலைக்குறிச்சி கண்மாய் பகுதியில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கள ஆய்வு செய்தபோது, நகராட்சி மயானப்பகுதியில் பாதி உடைந்த திருமாலின் கருங்கற் சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சேதமடைந்த நிலையில், இடுப்புப்பகுதி வரை மட்டுமே உள்ள இச்சிற்பம், முற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் உள்ளது.
இச்சிற்பத்தின் உயரம் 2 அடி, அகலம் 1½ அடி ஆகும். இதில் நான்கு கைகளுடன் கர்த்தரி முக முத்திரையில் வலது பின் கையில் சக்கரத்தையும், இடது பின் கையில் சங்கையும் ஏந்தியவாறு, காதுகளில் மகர குண்டலங்களுடன், கிரீடமகுடம் அணிந்து திருமால் காணப்படுகிறார். இச்சிற்பத்தில் அவரது இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி உடைந்து போயுள்ளது. அதன் உடைந்த பகுதி இங்கு காணப்படவில்லை. முகமும் தேய்ந்துள்ளது. சிற்ப அமைப்பைக் கொண்டு கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தாக இதைக் கருதலாம்.
திருவில்லிபுத்தூர் வடபத்திரசாயி பெருமாள் கோயிலில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறன் சடையன், வீரபாண்டியன் ஆகிய முற்காலப் பாண்டியர்களின் இரு வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. இதன்மூலம் இக்கோயில் முற்காலப் பாண்டியர்களால் கி.பி.10-ம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்டதை அறிய முடிகிறது. திருவில்லிபுத்தூர் கோயில் கட்டப்பட்ட அதே காலத்தைச் சேர்ந்ததாக இச்சிற்பம் உள்ளது. இதை அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாக ராஜகுரு தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu