மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் தொடரும் நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மக்கள் நடமாடும் பகுதியில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டது
மேற்கு மலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் இயங்கிவருகிறது. மேலும் இன்னும் சில நாட்களில் இங்கு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலயம் அமைய உள்ள நிலையில் நாட்டு வெடிகுண்டுகள் அதிகமாக கண்டெடுப்பது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த வாரம் வ.புதுப்பட்டி வனச்சரகம் பகுதியில் 9 நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தெற்கு கோட்டையூர் மேற்கு காலனி பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த காலனி பகுதியில் ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளியின் பின்புறம் மக்கள் நடமாட்டம் உள்ள தரிசு நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் நேற்று மாலை டிராக்டர் ஓட்டி சென்றுள்ளார்.அப்போது தரிசு நிலத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டு மீது டிராக்டர் சக்கரம் ஏறியதால் குண்டு வெடித்து பெரும் சத்தம் கேட்டது. இதனையடுத்து பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் காவல் துறையினர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு வெடித்த இடத்தில் ஆய்வு செய்த போது அதன் அருகிலேயே மேலும் 6 நாட்டு வெடிகுண்டுகள் கிடப்பது தெரியவந்தது.
சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து மேலும் ஏதேனும் குண்டு உள்ளதா என ஆய்வு செய்தனர். இந்த நிலையில் 6 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மாரிச்சாமி, அழகர்சாமி , முருகன்,முத்தையா ஆகிய 4 பேரை பிடித்து வத்திராயிருப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 15 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu