காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல் நாளை நல்லடக்கம்
ஶ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கடந்த 17ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 20ம் தேதி மூச்சு திணறல் ஏற்பட்டு மதுரை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் தொற்று அதிகரித்து, செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 7.55 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனோ அறிகுறி காரணமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனோ உறுதி செய்யப்படவில்லை என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
சிகிச்சையளித்த மருத்துவர் பிரவீன் ராஜ் மற்றும் முத்து ஆகியோர் பேட்டியில் கூறுகையில், ஏற்கனவே மாதவராவிற்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு அதிகளவில் இருந்தது. 2 முறை கொரோனோ பரிசோதனை செய்ததில் கொரோனோ நெகட்டிவ் வந்துள்ளது.
கொரோனோ அறிகுறிகள் இருந்ததால் கொரோனோ பாதிப்பிற்கு அளிக்கும் சிகிச்சையை முழுமையாக வழங்கினோம் என்றும், நிமோனியா நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டதால் கவலைக்கிடமான நிலைக்கு சென்றார்
அனுமதிக்கபட்ட கடந்த 20ம் தேதியிலிருந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தனர். மாதவராவ் உடல் ஸ்ரீவில்லிபுத்தூர் காதி போர்டு காலனி பகுதியில் உள்ள அவரது சொந்த இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டின் அருகேயுள்ள அவரது நிலத்தில் நாளை காலை உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக குடும்பத்தார் கூறியுள்ளனர். பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மாதவராவ் உயிரிழந்துள்ள நிலையில், ஶ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும், அவர் வெற்றி பெறும் பட்சத்தில் அங்கு மறு தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu