சாத்தூரில் தமிழக அரசின் அலங்கார ஊர்தியை அமைச்சர்கள் மலர்தூவி வரவேற்றனர்

சாத்தூரில் தமிழக அரசின் அலங்கார ஊர்தியை  அமைச்சர்கள் மலர்தூவி வரவேற்றனர்
X

தமிழக அரசின் அலங்கார ஊர்தியை மலர் தூவி வரவேற்கும் அமைச்சர்கள்

சாத்தூரில் தமிழக அரசின் அலங்கார ஊர்தியை அமைச்சர்கள் மலர்தூவி வரவேற்றனர். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்தனர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பைபாஸ் சாலை வெங்கடாசலபுரம், ஆகிய பகுதிகளில் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி இன்று பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தமிழக அரசின் அலங்கார வாகனத்தை மலர் தூவி வரவேற்றனர். உடன் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் ஒன்றிய பெருந்தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் 3 அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு அணிவகுப்பில் பங்கேற்று பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அவற்றில் ஒரு அலங்கார ஊர்தி விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்தது.

இந்த ஊர்தியின் முகப்பில் தமிழகத்தின் வேலூர் கோட்டையில் 1806-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சி, மருது சகோதரர்கள், வீரமங்கை வேலு நாச்சியார், வீரமங்கை வேலுநாச்சியாரின் போர்ப்படையில் பெண்கள் படை வீராங்கனை குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், அவரது படைத்தளபதி வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், மாவீரன் பூலித்தேவன், மன்னர் அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள் உருவாக்கிய காளையார் கோயில் கோபுரம் உள்ளிட்ட பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் உயிரோட்டமாக காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழ்நாட்டின் வீரர்களை போற்றும் வகையில் வருகை தந்த அலங்கார ஊர்திகளை ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அரசு அலுவலர்கள் என ஏராளமானோர் அணிவகுத்து நின்று கண்டு களித்தனர் மேலும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என பலர் அலங்கார வாகனம் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!