சாத்தூர் அருகே தனியார் மதுபான கூடத்தை அடித்து உடைத்த பொதுமக்கள்

சாத்தூர் அருகே தனியார் மதுபான கூடத்தை அடித்து உடைத்த பொதுமக்கள்
X

அடித்து உடைக்கப்பட்ட மதுபானக்கடை.

சாத்தூர் அருகே தனியார் மதுபான கூடத்தை அடித்து உடைத்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள அன்னபூர்ணாயா புரத்தில் கடந்த 30ஆம் தேதி தனியாருக்கு சொந்தமான மதுபான கூடம் திறக்கப்பட்டது. இந்த தனியார் மதுபான கூடம் கோவில் மற்றும் பள்ளி அருகில் அமைந்துள்ளதால் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் எனக்கூறி அந்த கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இந்த மதுபான கூடத்தை மூடக்கோரி வெம்பக்கோட்டை தாசில்தார் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். ஆனால் கிராம மக்கள் கொடுத்த மனு மீது எந்த வித நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பை மீறி செயல்பட்ட தனியார் மதுபானகூடம் மற்றும் 50 ஆயிரம் ருபாப் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் கடையில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் அடித்து நொறுக்கினர்.

மேலும் தனியார் மதுபான கூடத்தை நிரந்தரமாக மூடக்கோரி அந்த மதுபான கூடம் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெம்பக்கோட்டை தாசில்தார் மற்றும் காவல்துறையினர் மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்களின் எதிர்ப்பை மீறி செயல்பட்ட தனியார் மதுபான கூடத்தை வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். மேலும் தனியார் மதுபான கூடத்தை அடித்து நொறுக்கிய அன்னபூர்ணியாபுரம் கிராம மக்கள் 50 பேர் மீது வெம்பக் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் மதுபான கூடத்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!