தேர்தலில் மக்களின் பங்களிப்பு மிகமிக முக்கியம்: பீட்டர் அல்போன்ஸ்
மாநில சிறுபான்மை நல வாரிய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ்
ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழக மாநில சிறுபான்மை நல வாரிய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி.
ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இணைந்து நான்காண்டுகளாக நடத்த முடியாத உள்ளாட்சி தேர்தலை ஆட்சி பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் நடத்தி முடித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள். சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து வேகமாக உள்ளாட்சித் தேர்தல் வந்த காரணத்தினால் பொதுமக்களுக்கு வாக்களிப்பதில் ஆர்வம் குறைந்து இருக்கலாம். ஆனால் அவ்வாறு ஆர்வம் குறைவது நல்லதல்ல.
பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஆதாரம் தேர்தல்தான். ஆகவே தேர்தலில் மக்களின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது. தேர்தலில் வாக்காளர்கள் பங்களிப்பு குறைந்ததற்கான காரணத்தை அனைவரும் ஆராய வேண்டும். அரசாங்கம் மற்றும் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்களுக்காக பணியாற்றுகின்ற அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என மக்கள் தேர்தலில் ஏன் வாக்களிக்க வரவில்லை என்பதை ஆராய வேண்டும்.
நல்ல வேட்பாளர்கள் வரவில்லை. அதனால் மக்கள் வாக்களிக்க வரவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ள வில்லை.தேர்தலில் போட்டியிட தகுதி உள்ள அனைவரும் வரவேற்கப் படுகிறார்கள்.நல்லவர்கள் அரசியலிலிருந்து விலகுவதால் தான் சில நேரங்களில் விரும்பத்தகாத நபர்கள் அந்த இடத்தில் அமர்ந்து விடுகின்றனர்.அரசியல் என்பது புறந்தள்ள கூடியது அல்ல. அரசியல் மூலமாகத்தான் நல்ல அதிகாரத்தை செலுத்தும் நல்ல மக்கள் பிரதிநிதிகள் வர முடியும். எனவே நல்லவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்குவதற்காக தமிழகத்திலேயே நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.அரசியல் கட்சிகளும் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களின் தகுதியை உயர்த்த வேண்டும்.ஆகவே அப்படிப்பட்ட சூழலில்தான் மக்களிடம் தேர்தல் மேல் நம்பிக்கை வரும். வாக்கு சதவீதம் குறைந்தது குறித்து நானும் கவலைப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்.பாஜகவை பொருத்தவரை ஹிஜாப் விவகாரம் அதனுடைய நிலைமையை காட்டுகிறது. மத்தியிலே பொறுப்பிலிருந்த பொன் ராதாகிருஷ்ணன் வார்த்தையை சொல்கின்றபோது அந்த வார்த்தைக்குப் பின்னால் இருக்கின்ற விளைவுகளை ஆராய்ந்து பேசவேண்டும். அதை அவர் நியாயப்படுத்தினார் என்றால், எந்த பெண்ணும் சாலையில் பாதுகாப்பாக சென்று வர முடியாது. இந்த நிலை நமது வீட்டுப் பெண்களுக்கும் வரும். இது போன்ற வன்முறைகளை பாஜக அனுமதிக்கக் கூடாது. எதை செய்ய வேண்டும் என்ற வரைமுறைக்குள் பாஜக வர வேண்டும் என்றார் பீட்டர்அல்போன்ஸ்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu