இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தங்குமிடம் இல்லாமல் பொதுமக்கள் அவதி
பயன்பாடின்றி கிடக்கும் கர்ப்பிணிப் பெண்களை பார்த்துக்கொள்ள வரும் பாதுகாவலர்கள் கட்டிடம்.
இராஜபாளையம் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதால் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறப்பு தங்குமிடம் செயல்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் காந்தி சிலை பகுதியில் அரசு மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நாள்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் நாளொன்றுக்கு மகப்பேறு மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன. மகப்பேறு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு உதவியாக வரும் உறவினர்கள் தங்குவதற்காக தமிழக அரசு தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சுமார் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு தங்குமிடம் கட்டிடம் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
இதில் கர்ப்பிணி பெண்களின் உறவினர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக தங்குவதற்கான அறைகள் கட்டப்பட்டன. ஆனால், திறப்பு விழா கண்ட நாள் முதல் சிறப்பு தங்கும் கட்டிடம் பூட்டு போடப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணி பெண்களுக்கு உதவியாக வரும் பொது மக்கள் ஆங்காங்கே மரத்தின் கீழும், வாகனம் நிறுத்தும் இடத்திலும் அமர்ந்து சிரமப்பட்டு வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அரசு மகப்பேறு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் சிறப்பு தங்கும் இடத்தினை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu