ராஜபாளையம் பகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

ராஜபாளையம் பகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு
X
ராஜபாளையம் பகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு, கட்டுப்பாட்டு பகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

ராஜபாளையத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அந்தப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்துள்ள நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் இன்று ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணாபுரம் பகுதியில் 28 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்ததால், அந்தப்பகுதியை மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்திருந்தது. அந்தப்பகுதிக்குச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர், அங்கிருந்த பொதுமக்களிடம் நிலைமைகள் குறித்து கேட்டார். மேலும் அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மருத்துவ வசதிகள் தடையில்லாமல் கிடைக்கின்றதா என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்த அமைச்சர், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு விவரம், தேவையான மருந்துகள் இருப்பு விவரங்கள் குறித்து மருத்துவர்கள், அதிகாரிகளிடம் பேசினார். ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், மேல்சிகிச்சைகளுக்காக மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு அனுப்ப வேண்டிய நிலை இருப்பதால், கூடுதலாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் தேவை இருப்பதாக அதிகாரிகள் கூறினர். அமைச்சர் சுப்பிரமணியம் கூறும்போது,

தொற்று பாதிப்பிலிருந்து மக்களை மீட்பதற்கான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தருவதற்கு தயாராக உள்ளது. ஒவ்வொரு உயிரும் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு செய்து வருகிறது. அரசின் அத்தனைத்துறை அதிகாரிகளும், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அனைவரும் முழுமையாக பணிகளை செய்து வருகின்றனர். விரைவில் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்கான அனைத்து பணிகளையும் அரசு செய்து வருகிறது என்று கூறினார். ஆய்வு பணிகளின் போது மாவட்ட ஆட்சியர் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், தென்காசி எம்பி தனுஷ்குமார், ராஜபாளையம் எம்எல்ஏ தங்கப்பாண்டியன், யூனியன் சேர்மன் சிங்கராஜ் உட்பட பலர் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!