இராஜபாளையம் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி- இருவர் படுகாயம்

இராஜபாளையம் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலி- இருவர் படுகாயம்
X
இராஜபாளையம் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பலியானார்.மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகாவிற்கு உட்பட்ட அருளாட்சி மங்கம்மாள் சாலை தெருவில் வசிப்பவர் பெருமாள் மகன் பிரதாப் (வயது 34).இவர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் ராஜதுரை(வயது 27), அரவிந்த் (வயது 24),முத்துச்சாமி மகன் சுசீந்திரன் (வயது 22) இவர் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இவர்கள் நால்வரும் அருளாட்சியிலிருந்து நான்கு சக்கர வாகனமான டவேராவில் ராஜபாளையம் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்துவிட்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலிருந்து சொந்த ஊரான அருளாட்சிக்கு தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்துள்ளனர்.

ஓ.பி. கிருஷ்ணாபுரம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது எதிரே நாய் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. நாய் மேல் வாகனம் மோதி விடக்கூடாது என்று எண்ணி நான்கு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிரதாப் காரை சாலையின் இடது பக்கமாக திருப்பிய நிலையில் கார் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் பொறியியல் மாணவன் சுசீந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.உடன் வந்த ராஜதுரை, அரவிந்த், பிரதாப் ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.விபத்தில் பலியான சுசீந்திரனின் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!