பிறந்து 7 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்பனை செய்த தாய் உட்பட 4 பேர் கைது
பட விளக்கம்: பிறந்து 7 நாட்களை ஆன ஆண் குழந்தையை விற்பனை செய்தவர்களை படத்தில் காணலாம்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் ஜீவா நகர் சந்தனமாரியம்மன் கோவில் சேர்ந்தவர் முனீஸ்வரன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துசுடலி (வயது 36). இந்த தம்பதிக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த முத்துசுடலி வேறு ஒரு வாலிபரிடம் கள்ளக்காதல் வைத்துக் கொண்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்ததால் மீண்டும் கர்ப்பம் ஆனார்.
பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துசுடலிக்கு கடந்த 18.10.2023 அன்று ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப வறுமை, ஏற்கெனவே இருக்கும் குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கும் சவால்களை கருத்தில் கொண்டு தற்போது பிறந்த ஆண் குழந்தையை வளர்ப்பதில் முத்துசுடலிக்கு சற்றும் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.மேலும் தகாத உறவில் குழந்தை பிறந்ததால் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் நினைத்தார்.
இதையடுத்து குழந்தையை கொல்லும் எண்ணத்தை கைவிட்டு, தனது கணவர் மற்றும் உறவினர்கள் யாருக்கும் தெரியாமல் குழந்தையை விற்றுவிட முத்துசுடலி முடிவு செய்தார். அதன்படி தனது விருப்பத்தை சேத்தூரை அடுத்த முகவூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி ராஜேஸ்வரி (54) என்பவரிடம் கூறியுள்ளார்.அவர் மற்றும் தென்காசி மாவட்டம் பெரும்பத்தூரை சேர்ந்த புரோக்கர் ஜெயபால், ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த செல்வி (30) ஆகியோர் மூலம் ஈரோட்டை சேர்ந்த தம்பிராஜன் மனைவி அசினாவுக்கு பிறந்த 7 நாட்களேயான ஆண் குழந்தையை கடந்த 25.10.2023 அன்று முத்துசுடலி விற்றுள்ளார்.
இதற்கிடையே வீடு திரும்பிய முத்துசுடலிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தாய்ப்பால் கொடுக்காததால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர் குழந்தை பெற்றெடுத்த ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவ மனைக்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் மற்றும் செவிலியர்கள் குழந்தை எங்கே என்று கேட்டுள்ளனர். முதலில் பல்வேறு மழுப்பலான பதில்களை கூறிய முத்துசுடலி, பின்னர் குழந்தையை விற்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இதுபற்றி குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அலுவலர் திருப்பதிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் முத்துசுடலியிடம் விசாரணை நடத்தியபோது பிறந்த 7 நாட்களில் குழந்தையை ஈரோட்டை சேர்ந்த பெண்ணுக்கு விற்பனை செய்தது உறுதியானது. இதுபற்றி திருப்பதி மற்றும் விருதுநகர் உதவி மைய மேற்பார்வையாளர் விஸ்வநாதன் ஆகியோர் சேத்தூர் போலீசில் புகார் அளித்தனர்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், முத்துசுடலியிடம் அதிரடியாக விசாரணை நடத்தினார். இதில் குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லாததால் ஈரோட்டை சேர்ந்தவருக்கு ரூ.3½ லட்சத்துக்கு விற்றதும் அம்பலம் ஆனது. அந்த பணத்தில் ரூ.2 லட்சத்தை குழந்தையின் தாய் முத்துசுடலிக்கும், மீதமுள்ள ரூ.1½ லட்சம் புரோக்கர் மற்றும் மற்ற பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.அதனை அடிப்படையாக கொண்டு குழந்தையை விற்ற முத்துசுடலி, முகவூர் ராஜேஸ்வரி, நாமக்கல் குமாரபாளையம் செல்வி, குழந்தையை வாங்கிய ஈரோடு அசினா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதில் தலைமறைவாக உள்ள புரோக்கர் ஜெயபாலை தேடி வருகின்றனர். மேலும் கைதானவர்கள் அளித்த தகவலின் பேரில் குழந்தையை மீட்ட காவல்துறையினர் விருதுநகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து பராமரித்து வருகிறார்கள்.ராஜபாளையத்தில் பிறந்த ஒரு வாரமேயான ஆண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu