மேய்ச்சலுக்கு சென்ற சினை எருமை மாடு நாட்டு வெடிகுண்டு வெடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை...
இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற சினை எருமை மாடு நாட்டு வெடிகுண்டு வெடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். வனத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை செல்லும் அய்யனார் கோவில் சாலையில் ஆறாவது மயில் நீர்த்தேக்கம் அருகே கலாராணி என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் தோப்பு உள்ளது.
இந்த தோப்பில் இராஜபாளையம் நாட்டு இன நாய், நாட்டுக்கோழி மற்றும் மாடு வளர்த்து வருகின்றனர். இவர்களுடைய சினை எருமை மாடு ஒன்று வழக்கம் போல் அந்த பகுதியில் மேய்ச்சலுக்காக சென்ற பொழுது, திடீரென வெடி குண்டு சப்தத்துடன் மாடு தூக்கி வீசப்பட்டது,
இதனை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வனவிலங்குகள் வேட்டையாடுவதற்காக பழங்களுக்கு இயைே வைத்திருந்ததை எருமைமாடு பழம் என நினைத்து சாப்பிடும்பொழுது வெடித்தது தெரியவந்தது.
இதில் எருமை மாட்டின் வாய் தாடைகள் சிதறி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறது. தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் காயமடைந்த மாட்டிற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் கலாராணி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டனர் .
இதேபோல் வனத்துறையிடமும் புகார் அளித்துள்ளார். வனத்துறையும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மான், காட்டுப்பன்றி போன்றவைகளை வேட்டையாடுவதற்காக இது வைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதும் சட்டவிரோத செயலுக்காக நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் கடந்த 10 தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் மற்றொரு மாடு நாட்டு வெடிகுண்டை சாப்பிட்டு பலியானதாகவும் அப்பகுதியில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் கூறுகின்றனர். ஆகையால் இந்த பகுதியில் நாட்டு வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த காவல்துறை வனத்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu