விருதுநகரில் காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை
காமராஜர் நினைவு இல்லத்தில் காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
https://www.maalaimalar.com/news/state/kamarajar-birthday-celebration-ministers-mlas-pay-respect-636261?infinitescroll=1
இன்று காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஆட்சியர் ஜெயசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லம், மணி மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நினைவு இல்லத்திற்கு சென்ற ஆட்சியர் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு சார்பில் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகர சபை தலைவர் மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ரெங்கப்ப நாயக்கன்பட்டி கிராமிய நூற்பு நிலையம் சார்பில் பெண்கள் நூற்பு வேள்வி நடத்தினர். அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தபின் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெருந்தலைவர் காமராஜர் நாட்டின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்காற்றியவர். அவரது வழியில் தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பதிவு வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது என்றார்.
விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காமராஜ் சிலைக்கு நகர சபை தலைவர் மாதவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கமிஷனர் லீனா சைமன், துணைத் தலைவர் தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு தனியார் பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu