விழுப்புரம் மக்களவை தொகுதி: ஒரு பார்வை

விழுப்புரம் மக்களவை தொகுதி: ஒரு பார்வை
X
சென்னை மாகாணத்தின் முதல் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சொந்த ஊரான ஓமந்தூர் இங்குதான் உள்ளது.

தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 13-வது தொகுதி விழுப்புரம். 2008-ஆம் தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட தொகுதி விழுப்புரம்.

திண்டிவனம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அதில் இருந்த பல தொகுதிகளை எடுத்தும், சில தொகுதிகளை சேர்த்தும் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. சென்னை மாகாணத்தின் முதல் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சொந்த ஊரான ஓமந்தூர் இங்குதான் உள்ளது.

கரும்பு மற்றும் நெல் சாகுபிடி என முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பகுதியாகவே விழுப்புரம் இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 90 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் நெல், கரும்பு ஆகியவை பிரதான பயிற்களாக உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக கம்பு, தினை, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் கிராமங்கள் அதிகமுள்ள தொகுதி. எனவே இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய தொழிற்சாலைகள் இல்லை என்பது பெறும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது, எனவே படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக புதுச்சேரி, சென்னை, திருச்சி, பெங்களூர் என அண்டை மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும் நிலை உள்ளது. விழுப்புரத்தில் தொழிற்பேட்டை அமைய வேண்டும் என்பது இங்குள்ளவர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

இது பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும்.

இந்த தொகுதியில், தற்போது 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அவை, திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல்முறையாக விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை சந்தித்தது. 2009ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளார் ஆனந்தன் 3,06,826 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட மறைந்த சாமிதுரை 3,04,029 வாக்குகள் பெற்று வெறும் 2,797 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

அதனை தொடர்ந்து 2014 நாடாளுமன்ற தேதில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் 4,82,704 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், திமுக சார்பில் போட்டியிட்டு மருத்துவர் முத்தையன் 2,89,337 வாக்குகள் பெற்று 1,93,367 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார் 5,59,585 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்ட வடிவேல் ராவணன் 4,31,517 வாக்குகள் பெற்று 1,28,168 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் வரலாறு

2009 மு. ஆனந்தன் (அதிமுக)

2014 எஸ். ராஜேந்திரன் (அதிமுக)

2019 ரவிக்குமார் (திமுக)

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!