விழுப்புரம் அருகே சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
விழுப்புரம் அருகே கப்பூர் கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோவிலில் சோழர்கால கல்வெட்டை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ், விழுப்புரம் கணிப்பொறியாளர் பிரகாஷ் ஆகியோர் கண்டறிந்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில்,
ஊரின் வடக்கே செய்தருளி ஈஸ்வரர் என்னும் பழமையான சிவன் கோவில் கருவறையின் தென்கிழக்கு பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழனின் இரண்டாம் ஆட்சி ஆண்டான கி.பி. 1,072-ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இவ்வூரை கப்பூர் என்றும், இங்குள்ள இறைவனை செய்தருளு நாயனார் என்றும் அழைக்கிறது.
மேலும் இங்கே சந்தி விளக்கு எரிப்பதற்கு 3 பசுக்களை தானமாக இக்கோவிலை நிர்வகித்த நேராபிராணன் என்பவனிடம் வழங்கியதை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவற்றில் இருந்து இவ்வூர் சோழர் காலத்தில் இருந்து கப்பூர் என்று வழங்கப்பட்டதை அறிகிறோம். இக்கோவிலில் பல்லவர் காலத்திய 2 விஷ்ணு சிற்பங்களும் ஒரு விநாயகர் சிற்பமும் மீசையுடன் கூடிய லகுலீசர் சிற்பமும் வரலாற்று சிறப்புமிக்கவை.
எனவே பல்லவர் காலத்திலேயே இவ்வூரில் ஒரு சிவன் கோவில் இருந்து பின்பு சோழர் காலத்தில் மீண்டும் கட்டப்பட்டிருக்க வேண்டும். இக்கோவிலின் அதிட்டானம் மட்டும் கருங்கல்லை கொண்டும் மற்ற பகுதிகள் செங்கலை கொண்டும் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் தற்போது மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறையினர் பராமரிக்க வேண்டும் என கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu