ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் பூச்சி மருந்து குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், சொர்ணாவூர் கீழ்பாதியைச் சேர்ந்தவர் தங்கதுரை(25). விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மனு அளிக்க வந்தவர், திடீரென தான் வைத்திருந்த பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்சில் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது, கடந்த 2015ஆம் ஆண்டு லாரி வாங்கி தொழில் செய்து வந்ததாகவும், இதற்காக கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.9.50 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்நிறுவன மேலாளர் சபரிநாதன், லாரி வாங்கியதற்கான ஆர்சி புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்காமல் அவர்களே வைத்து இருந்துள்ளனர்.
வாங்கிய கடனுக்கு முதல் தவணையாக ரூ.42 ஆயிரம் பணம் செலுத்தி உள்ளார். அப்போது சென்று கேட்டபோது ஆர்சி புத்தகத்தை வழங்க மறுத்துள்ளனர். இதனையடுத்து ஆர்சி புத்தகம் வழங்குவதற்கு சொத்து ஆவணம் வழங்க வேண்டும் என அந்த நிறுவனத்தினர் கேட்டு தங்கதுரையின் உறவினரின் சொத்து பத்திரத்தை வாங்கி சென்றுள்ளனர்.அதற்கு பிறகும் லாரியின் ஆர்சி புத்தகத்தை வழங்கவில்லை.இந்நிலையில் தவணைத் தொகை கட்டவில்லை எனக்கூறி லாரியை அந்த நிறுவனத்தினர் வாங்கிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக தங்கதுரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து அந்த நிதி நிறுவனத்தினர், தவணை கட்டாததால் லாரியை ரூ.10 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.சொத்து பத்திரம், லாரியும் போனதால் விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து வந்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் தங்கதுரையின் மனுவை வாங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu