ஆலயம் அறிவோம்: திருவக்கரை ஸ்ரீவக்ரகாளியம்மன் ஆலயம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீவக்ரகாளியம்மன் ஆலயம். தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான ஸ்ரீசந்திர மவுலீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது ஸ்ரீவக்ரகாளியம்மன் சந்நிதி.
தல வரலாறு: வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜ பெருமாள் சம்காரம் செய்தார். வக்ராசூரனின் தங்கை துன்முகியை வக்ர காளி சம்காரம் செய்யும் போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம். எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள்.
சம்காரம் பண்ணியதால் ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் வலது புறம் 5 இடப்புறம் 4 என்ற கணக்கின்படி சுற்றிவர வேண்டும் என்பது ஐதீகம். வக்ர சாந்தி திருத்தலம் என்று இத்தலத்திற்கு பெயர்.
பொதுவாக காளி கோவில் ஊரின் எல்லையில்தான் இருக்கும். ஆனால் இங்கு ஊரின் நடுவில் ராஜ கோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்து வித்தியாசமானதாக உள்ளது.
வக்கிரகாளியின் திருவுருவம் பிரமிப்பாக இருக்கிறது. சுடர் விடும் தீக்கங்கு பின்னணியில் தலை, மண்டை ஓட்டுக் கிரீடம், வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம், எட்டுத்திருத்தலங்கள் வலப்புறக் கைகளில் பாசம், சக்கரம், வாள், காட்டேரி, கபாலம், பகைவர்களின் தலைகளையே மாலையாக தொடுத்து அந்த தலை மாலையையே மார்பு கச்சாக இடத் தோளிலிருந்து இறங்கி தொங்கும் வலக்கையில் சென்று முடிகின்றது. முண்ட மாலையினை அவள் முப்பிரி நூலாக அணிந்திருக்கிறாள்.
இக்கோவிலை வலம் வர நினைப்பவர்கள் வலப்பக்கமாக ஐந்து முறையும், இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும்.
பிரார்த்தனை: மனநிம்மதி கிடைக்க, கிரக தோசங்கள் நீங்க, காரியத் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலக, பாவ தோசங்களும் விலக, காரியத் தடைகள் நீங்க இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானை பிரார்த்திக்கிறார்கள்.
வக்ர தோசங்கள், ஜாதக கிரக தோசங்கள், வியாபாரத்தடை, உத்தியோகத் தடை நீங்கவும், திருமணம் ஆகாதவர்கள், குழந்தைபேறு இல்லாதவர்கள் இத்தலத்தின் மிக முக்கிய பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மனை வணங்குகின்றனர்.
நீண்ட நாட்களாக கல்யாணம் ஆகாதவர்கள் காளி சன்னதி எதிரில் உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்ய கயிறு கட்டி எலுமிச்சம் பழ தீபம் ஏற்றுவது வழக்கம். எந்தவிதமான பிரச்சினைகள் இருந்தாலும் கோரிக்கை சீட்டு எழுதி சூலத்தில் கட்டுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
வழிபாடு: பவுர்ணமி இரவு 12 மணிக்கும் அமாவாசை பகல் 12 மணிக்கும் வக்ரகாளியம்மனுக்கு தீபாராதனை காட்டும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுகிறார்கள். வக்ரகாளியம்மன் சன்னதியின் கோபுர மண்டபத்திற்கு மேல் சூடம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை தரிசனம் காணுவது இத்தலத்தின் முக்கிய விசேஷம்
கோவில் திறந்திருக்கும் நேரம்
6.00 AM - நடை திறப்பு
8 AM – 8.30 AM காலை சாந்தி
12 AM – 12.30 AM உச்சி காலம்
6 PM – 6.30 PM சாயரட்சை
8.30 PM நடை சாத்தல்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu