விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் அழகி போட்டி: சென்னை நிரஞ்சனா முதலிடம்
மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் வெற்றி பெற்ற திருநங்கைகள்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கூத்தாண்டவர் கோயிலில் சாகை வார்த்தல் நிகழ்வு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்கியது.
முக்கிய நிகழ்வான தாலி கட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நாளை காலை தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த கூவாகம் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வருகை புரிந்துள்ளனர்.
இந்நிலையில் திருநங்கைகளை உற்சாகப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மிஸ் கூவாகம் போட்டி நடத்தபட்டு வருகிறது. அதன்படி, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 15 திருநங்கைகள் கலந்து கொண்டு வண்ண அலங்கார உடையணிந்து வலம் வந்தனர். இந்த மிஸ் கூவாகம் போட்டியில், சென்னையை சார்ந்த நிரஞ்சனா முதலிடம் பிடித்து அசத்தினார். சென்னையைச் சேர்ந்த திஷா இரண்டாம் இடத்தையும், சேலத்தைச் சேர்ந்த சாதனா மூன்றாம் இடத்தையும் பிடித்து மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநங்கை திஷா, “நான் திருநங்கை என்பதை அறிந்த என்னுடைய சகோதரர்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னுடைய அம்மா மட்டுமே ஏற்றுக்கொண்டார். சமூகத்தில் இருப்பவர்கள் ஆயிரம் கேலி கிண்டல் செய்தாலும், இன்று வெற்றி பெற்றது மகிழ்ச்சியும் உத்வேகமும் அளிக்கிறது. திருநங்கைகளின் வளர்ச்சிக்காக நான் தொடர்ந்து பாடுபடுவேன். உலகளவில் நடைபெறும் ரேம்ப் வாக்கில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டுமென்பது தான் என்னுடைய ஆசை” என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu