மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் திறப்பு! ஊர் மக்களுக்கு அனுமதி மறுப்பு!
பூஜை முடிந்ததும் கோவிலை சீல் வைத்த அதிகாரிகள்
இரு தரப்பு மோதல் காரணமாக மூடப்பட்ட மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில், நீதிமன்ற உத்தரவின்பேரில் நேற்று திறக்கப்பட்டது.
விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜர் திரவுபதி அம்மன் கோவிலில் கடந்தாண்டு ஏப்ரல் 7ம் தேதி நடந்த தீமிதி விழாவில், இரு சமூகத்தினரிடையே வழிபாடு செய்வதில் மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், ஒரு தரப்பினர் அறநிலையத்துறையின் பொது கோவில், அனைவரும் வழிபட அனுமதிக்க வேண்டும் என்றனர். மற்றொரு தர்ப்பினர், தங்களின் மூதாதையர் கால குலதெய்வ கோவில் எனக்கூறி, பொது நிர்வாக வழிபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக கடந்தாண்டு ஜூன் 7ம் தேதி, ஆர்.டி.ஓ., தலைமையில் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், கோவிலைத் திறந்து வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என, பொது நல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், கோவிலைத் திறந்து, அறநிலையத்துறை மூலம், பொது அர்ச்சகரை நியமித்து பூஜை செய்ய கடந்த 18ம் தேதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து, நேற்று காலை 6:00 மணிக்கு, வட்டாட்சியர் வசந்தகிருஷ்ணன், அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் தலைமையில், சீல் அகற்றி கோவில் கதவுகளை திறந்து துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, வட்டாட்சியர் , கிராம உதவியாளர், இணை ஆணையர் உள்ளிட்ட குழுவினர், வீடியோ பதிவுடன், கோவிலில் தற்போதுள்ள பொருட்கள் குறித்து கணக்கெடுத்தனர்.
பின்னர், அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் சந்திசேகர், காலை 7:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு பூஜை செய்தார். ஒரு கால பூஜை முடிந்ததும் காலை 7:30 மணிக்கு மீண்டும் கோவில் கதவுகள் மூடி சீல் வைக்கப்பட்டது.
இந்த பூஜையின் போது பொதுமக்கள் அனுமதிக்கப்பவில்லை. ஆர்.டி.ஓ., காஜாஷாகுல் அமீது உள்ளிட்ட அதிகாரிகளும் வாயில் பகுதியில் நின்று கண்காணித்தனர்.
இதனால், மேல்பாதிக்குச் செல்லும் இரண்டு சாலையிலும், 1 கி.மீ., முன்பே ஏ.டி.எஸ்.பி., ஸ்ரீதரன் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, வெளி நபர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்ட யாரையும் அனுமதிக்கவில்லை.
கோவில் பகுதியில், தடை உத்தரவு தொடர்வதால், பொது மக்கள் வழிபட அனுமதியில்லை. தொடர்ந்து காவல்துறை பாதுகாப்புடன், அர்ச்சகர் மட்டும் தினசரி காலை சீல் அகற்றப்பட்டு, பூஜை செய்துவிட்டு செல்வார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu