விழுப்புரம் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கர்

விழுப்புரம் மக்களவை தொகுதி பாமக  வேட்பாளர் முரளி சங்கர்
X

விழுப்புரம் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கர் 

பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் மக்களவை தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் மாநில மாணவரணி செயலாளர் முரளி சங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

மேலும், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதில், விழுப்புரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக பாமக மாநில மாணவரணி செயலாளர் முரளி சங்கரை பாமக அறிவித்துள்ளது.

விளையாட்டு டூ அரசியல்: தனது பத்தாவது வயதிலிருந்து லிவர்பூல் கால்பந்தாட்ட அணியின் தீவிர ரசிகரான முரளி சங்கர், 17 வயதில் பள்ளிகளுக்கிடையேயான மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2007-ல் பெங்களூருவில் பெங்களுரு கிக்கர்ஸ் கால்பந்தாட்ட கிளப்பில் சேர்ந்து, அந்த அணிக்காக ஒரே சீசனில் 14 கோல்களை அடித்துள்ளார்.

அதன் பிறகு, தலைநகர் டெல்லிக்குச் சென்று எம்பிஏ படித்த இவர், டெல்லி கால்பந்தாட்ட அணிக்காக விளையாடியுள்ளார். பின்னர், பிரெஞ்சு கால்பந்து கிளப்பில் முக்கிய பதவியில் அமர்ந்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு பிரான்ஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

2015ஆம் ஆண்டு சொந்த ஊர் திரும்பிய முரளி சங்கர், சில மாதங்களிலேயே பாமகவின் அரசியல் பணியால் ஈர்க்கப்பட்டு, அக்கட்சியில் சேர்ந்தார். 2016ஆம் ஆண்டே அவருக்கு அரூர் தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அத்தேர்தலில் தோல்வியடைந்தார்.

அதன் தொடர்ச்சியாக, 2021ஆம் ஆண்டு வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிட்டார். கிராமம்தோறும் விளையாட்டு திடல் அமைத்து, இளைஞர்களின் உடலையும், உள்ளத்தையும் வலிமையாக வைத்து இருக்க உதவுவேன் என்ற உறுதிமொழியோடு பாமக சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியில் களமிறங்கினார், முரளி சங்கர். இருப்பினும், அங்கேயும் தோல்வியுற்றார்.

இந்த நிலையில், தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாமக மாநில மாணவரணி செயலாளர் முரளி சங்கரை வேட்பாளராக அறிவித்துள்ளது. விளையாட்டுத் துறையில் கால்பந்தாட்ட வீரராகவும், பயிற்சியாளராகவும் வெளிநாடுகளில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்