பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் தையல் எந்திரம் சலவைப்பெட்டி பெற விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மின் மோட்டாருடன் கூடிய தையல் எந்திரம், சலவைப்பெட்டி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்த மக்களின் பொருளாதார நிலையில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் இலவச மின் மோட்டாருடன் கூடிய தையல் எந்திரங்கள் மற்றும் சலவைப்பெட்டி வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் 20 முதல் 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும். தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு ரூ.1 லட்சமாக இருத்தல் வேண்டும். கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் போன்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒருமுறை தையல் எந்திரம் மற்றும் சலவைப்பெட்டி பெற்றிருப்பின் மீண்டும் தையல் எந்திரம் மற்றும் சலவைப்பெட்டி பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவார்கள்.
எனவே இத்தகுதியுடைய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்தவர்கள், அலுவலக நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu