விழுப்புரத்தில் 81.36 சதவீத வாக்குகள் பதிவு

விழுப்புரத்தில் 81.36 சதவீத வாக்குகள் பதிவு
X
விழுப்புரம் மாவட்டத்தில் முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 81.36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.

முதல்கட்டமாக செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த 7 ஒன்றியங்களை உள்ளடக்கிய 16 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கான 95 பேரும், 158 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களுக்கு 745 பேரும், 372 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு 1,459 பேரும், 2,751 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 8,574 பேர் என்று மொத்தம் 10,873 பேர் களத்தில் இருந்தனர்.

இதில் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 54 ஆயிரத்து 459 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் 1,569 வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஆரம்பத்தில் மந்தமாக நடைபெற்ற நிலையில் 8 மணியில் இருந்து பகல் 12 மணி வரை விறு, விறுப்பாக நடைபெற்றது. அதன் பிறகு மதிய வேளையில் பொதுமக்களின் வருகை குறைந்ததால் வாக்குப்பதிவு சற்று மந்தமானது. அதன் பின்னர் மாலை 3 மணியில் இருந்து மீண்டும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்தது.

தொரவி, கப்பியாம்புலியூர், கயத்தூர், ஒரத்தூர், பில்ராம்பட்டு, ஒட்டம்பட்டு, வடகரைத்தாழனூர், பெரியசெவலை, சரவணம்பாக்கம், கருவேப்பிலைப்பாளையம், ஒட்டனந்தல், ஆனத்தூர், புருஷானூர், வானூர் காலனியில் 2 வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட 20 வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு பிறகும் வாக்களிக்க முடியாமல் ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் அவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது.

பின்னர் அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாக்காளர்களை வரிசையில் ஒழுங்குப்படுத்தி வாக்களிக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி அவர்கள் நீண்ட வரிசையில் நின்று டோக்கனில் உள்ள வரிசை எண்ணின்படி வாக்குச்சாவடிக்குள் சென்று தங்கள் வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினர். இதன் காரணமாக அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறைவடைய இரவு 8.30 மணி வரை ஆனது. அப்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை.

இத்தேர்தல் பணியில் 2 மாவட்டங்களிலும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 15 ஆயிரம் பேர் ஈடுபட்டனர். அனைத்து வாக்குச்சாவடிகளும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. மேலும் வாக்குப்பதிவு வீடியோ மூலமும் பதிவு செய்யப்பட்டது.

தேர்தல் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடைபெற ஏதுவாக விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் விழுப்புரம் ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி ஜியாவுல்ஹக் ஆகியோர் தலைமையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் உள்ளூர் போலீசார் மட்டுமின்றி வெளிமாவட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் என 5,500-க்கும் மேற்பட்டோர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இத்தேர்தலில் மொத்தம் 81.36 சதவீத வாக்குகள் பதிவானது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!