பிளஸ் 2 பொதுத்தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 21 675 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்
வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது.
திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 34 தேர்வு மையங்கள், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 45 தேர்வு மையங்கள், செஞ்சி கல்வி மாவட்டத்தில் 17 தேர்வு மையங்கள் என 96 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 186 பள்ளிகளில் இருந்து 10 ஆயிரத்து 565 மாணவர்களும், 11 ஆயிரத்து 110 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 675 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்.
இந்த தேர்வு பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வின்போது மாணவர்கள் எந்த ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடாத வண்ணம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் காவல் துறையின் மூலம் பாதுகாப்பு வசதிகள் மற்றும் தடையற்ற மின்சார வசதி, போக்குவரத்து வசதிஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்வையொட்டி சென்னை அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்தில் இருந்து வினாத்தாள்கள் பெறப்பட்டு அவை விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலகம், திருக்கோவிலூர் லட்சுமி வித்யாலயா பள்ளி ஆகிய இடங்களில் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu