விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது: சபாநாயகர் அப்பாவு
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் விஜயதரணி. சமீபகாலமாக காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்த விஜயதரணி பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்கள் பரவின.
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில் நேற்று பாஜகவில் இணைந்தார் விஜயதாரணி. காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.
இணைப்பு நிகழ்ச்சியின்போது, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கட்சித்தலைமைக்கு எழுதிய கடிதத்தை விஜயதரணி செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
பாஜகவில் இ்ணைந்ததை தொடர்ந்து விஜயதாரணி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதாரணி அறிவித்தார்.
இதனிடையே கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் இருந்து வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் விஜயதரணியின் எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், விஜயதரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டேன். விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். விளவங்கோடு தொகுதி காலி என அறிவிக்கப்பட்டால், மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெற வாய்ப்பு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu