வனத்துறை அனுமதிக்கு பிறகும் சாலை வசதி இல்லாத மலை கிராமம்

வனத்துறை அனுமதிக்கு பிறகும் சாலை வசதி இல்லாத மலை கிராமம்
X

நோயாளியை டோலியில் சுமந்து செல்லும் மலைகிராம மக்கள் 

மலை கிராமம் என்பதால் முறையான சாலை வசதிகள் ஏதும் இல்லை. இதனால் அவசர சிகிச்சைகளுக்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய அவலம்

வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம், துத்திகாடு ஊராட்சிக்குட்பட்ட தெள்ளை மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இது மலை கிராமம் என்பதால் முறையான சாலை வசதிகள் ஏதும் இல்லை. இதனால் அவசர சிகிச்சைகளுக்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

பிரசவ காலத்தில் பெண்களும் அவ்வாறே நடந்து சென்று வருவதாகவும், முடியாத நேரத்தில் டோலி கட்டி மருத்துவமனைக்கு நடந்தே தூக்கி செல்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த ஊரை சேர்ந்தவர்கள் மருத்துவ மனை உள்ளிட்ட வெளியிடங்களில் இறந்துவிட்டால் அவரது உடலை கூட டோலி கட்டி தான் மலைகிராமத்திற்கு சுமந்து செல்கின்றனர். இதில் பிரசவத்திற்காக டோலி கட்டி அழைத்துச் சென்றபோது இறப்பு சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாக உள்ளது.

கிராமத்திற்கு செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லாததால் கிராமத்திற்குள் வாகனம் செல்ல முடியாத சூழல் உள்ளது. துத்திக்காடு கிராமத்தில் இருந்து தெள்ளை மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் 10 இடத்தில் காட்டாறுகள் செல்கிறது.

ரேசன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு கிராம மக்கள் தலைமீது சுமந்தபடியே ஆற்றை கடந்து மலை பகுதிக்கு நடைபயணமாக செல்கின்றனர்.

தொடர் மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கிராமத்திற்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்படும். தற்போது வரை ஆற்றில் தண்ணீர் செல்வதால், மிகவும் சிரமப்பட்டு ஆற்றை கடந்து செல்கின்றனர்.

எப்போது மழை பெய்தாலும் இந்த கிராமத்திற்கு ஆற்றைக் கடந்து செல்வது மிகவும் சிரமமான காரியம். சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமம் வனப்பகுதியில் அமைந்துள்ளது.

கிராம மக்கள் செல்லும் சாலையில் தெரு விளக்குகள் கூட இல்லை. இரவு நேரத்தில் செல்லும் பொதுமக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி செல்கின்றனர். தார்சாலை அமைப்பதற்கு பலமுறை அளவீடு செய்தும் இதுவரை சாலை அமைப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளவில்லை.

துத்திக்காடு கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு செல்ல ஆற்று வழி தவிர வேறு எந்த வழியும் இல்லை. இந்த நிலையில் துத்திக்காடு முதல் தெள்ளை மலை கிராமம் வரை சாலை அமைத்துக் கொள்ள வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவு 3 அடி அகலத்தில் சாலையும், கடந்து செல்ல 9 இடங்களில் தரைப்பாலமும் அமைத்துக் கொள்ள வனத்துறையினர் மூலம் அனுமதி உடன் கூடிய தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சிதுறை அதிகாரிகள் சாலை அமைப்பதற்கு நபார்டுவங்கி திட்டத்தின் கீழ் நிதி கேட்டு அரசுக்கு அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மலைப்பகுதியில் வாழும் மாணவர்கள் படிப்பதற்காக அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி அங்கு உள்ளது. போக்குவரத்திற்கு லாயக்கற்ற கரடு முரடாக கிடக்கும் இந்த வழியில் ஆசிரியர்கள் மிகவும் சிரமத்துடன் வந்து செல்கின்றனர்.

இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்த போது, 2 சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் தவறி கீழே விழுந்து கை உடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அச்சப்படுகின்றனர்.

கல்வி கற்க அதிக ஆர்வத்துடன் மாணவர்கள் இருக்கும்போதிலும், சாலை வசதியை காரணம் காட்டி ஆசிரியர்கள் பள்ளிக்கு சரிவர வராததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது.

உண்டு உறைவிடப் பள்ளியில் 3 வேளையும் மாணவர்களை அமர வைத்து கல்வி கற்பதோடு, அவர்களுக்கு சத்தான உணவு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் அரசு வழங்குகிறது. ஆனால் இந்த பள்ளிக்கு வழங்கப்படும் அரசின் சலுகைகள் எங்கே செல்கிறது என தெரியவில்லை. சுதந்திரமடைந்த காலத்தில் இருந்தே மலைகிராமத்திற்கு சாலை வசதிகள் செய்து தரப்பட வில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வனத்துறை சார்பில் அனுமதி வழங்கியும் கூட சாலை அமைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலை வசதி மட்டும் அரசு செய்து கொடுத்தால் போதும். மற்ற தேவைகளை நாங்களே பூர்த்தி செய்து கொள்வோம். இனியாவது அரசாங்கமும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக மலைகிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!