வேலூர் அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் பணியிடை நீக்கம்
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் உடல்களை வழங்க உறவினர்களிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் சுகாதார ஆய்வாளரை தலைமை சுகாதாரத்துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அங்கு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானோரின் உடல்களை பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்து, அரசின் இலவச அமரர் ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் உறவினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் உடல்களுக்கு மருத்துவத்துறை அதிகாரிகள் ஒரு உடலுக்கு ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை பணம் வசூல் செய்வதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன.
அதில், பிணவறையில் பணியில் இருந்த சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், உயிரிழந்த கொரோனா நோயாளியின் ஒவ்வொரு உடலுக்கும் ரூ.500, வசதியானவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் வரை பண வசூல் செய்வதையே குறியாகச் செயல்பட்டு வந்துள்ளார்.
இதுகுறித்த புகார் வேலூர் முன்னாள் கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு சென்றது. அதன் பேரில் கலெக்டர், லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளர் வெங்கடேசனை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றிய இளங்கோ மற்றும் பிறப்பு மற்றும் இறப்பு சான்று வழங்கும் இடத்தில் பணியாற்றிய மற்றொரு வெங்கடேசன் ஆகிய 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
சுகாதார ஆய்வாளர் வெங்கடேசனை விசாரிக்க குழு அமைத்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், சென்னை தலைமையிடத்துச் சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்திருந்தார்.
தற்போது விசாரணை முடிவடைந்த நிலையில் சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தலைமைச் சுகாதாரத்துறை, சுகாதார ஆய்வாளர் வெங்கடேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu